1 ரன்னுக்கு 3 விக்கெட்.. பங்களாதேஷ் நியூசிலாந்தை வீழ்த்தி டி20-ல் வரலாற்று வெற்றி

0
3235
Bangladesh

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்த நிலையில் இன்று டி20 தொடர் தொடங்கியது. நேபியரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷான டோ பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து நியூசிலாந்து அணி தரப்பில் ஃபின் ஆலன் – செய்ஃபெர்ட் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. வங்கதேச அணி தரப்பில் ஸ்பின்னரான மெஹதி ஹசன் முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரின் 4வது பந்திலேயே செய்ஃபெர்ட் ரன் ஏதும் எடுக்காமல்; போல்டாகி ஆட்டமிழக்க, தொடர்ந்து இடதுகை வேகப்பந்துவீச்சாளரான சொரிஃபுல் இஸ்லாம் வீசிய 2வது ஓவரை வீச அழைக்கப்பட்டார்.

- Advertisement -

இந்த ஓவரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஃபின் ஆலன் 1 ரன்னிலும், தொடர்ந்து வந்த கிளென் பிலிப்ஸ் டக் அவுட்டாகியும் வெளியேறினர். இதனால் நியூசிலாந்து அணி 1 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து சிஎஸ்கே அணியால் ரூ.14 கோடி கொடுத்து வாங்கப்பட்ட மிட்செல் ஸ்பின்னரான மெஹதி ஹசன் பந்தில் 15 பந்தில் 14 ரன்களில் எடுத்து வெளியேறினார்.

தொடர்ந்து சாப்மேன் – நீஷன் கூட்டணி அதிரடியாக ரன்கள் சேர்த்தது. இதில் சாப்மேன் 19 ரன்களில் ஆட்டமிழந்தாலும், நீஷன் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 3 சிக்ஸ், 4 பவுண்டரி விளாசி 48 ரன்கள் சேர்த்தார். இறுதியாக நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தது.

வங்கதேச அணி தரப்பில் சொரிஃபுல் 3 விக்கெட்டுகளையும், முஷ்டாஃபிகுர் மற்றும் மெஹதி ஹசன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்பின் 135 ரன்கள் என்ற இலக்குடன் வங்கதேச அணி தரப்பில் லிட்டன் தாஸ் – ரோனி தலுக்தார் கூட்டணி களமிறங்கியது. இதில் ரோனி 10 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த கேப்டன் ஷான்டோ சிறுது நேரம் தாக்கு பிடித்து 19 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

பவர்பிளே ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 42 ரன்கள் சேர்த்தது. இதன்பின் சவுமியா சர்கார் அதிரடியாக சில பவுண்டரிகளை விளாசினார். இதனால் வங்கதேச அணியின் ரன் ரேட் உயர்ந்த நிலையில், அவரும் 22 ரன்களில் ஆட்டமிழக்க, வங்கதேச அணியின் ஸ்கோர் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 73 ரன்களாக இருந்தது.

இதன்பின் வந்த ஹிர்தாய் 19 ரன்களிலும், ஹொசைன் 1 ரன்னிலும் ஆட்டமிழந்ததால் 97 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் ஒருமுனையில் லிட்டன் தாஸ் நங்கீரமிட்டு பேட்டிங் செய்து வந்தார். இதன்பின் அவருடன் மெஹதி ஹசனும் நிதானமாக விளையாடி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டி வங்கதேச அணி வெற்றிபெற்றது. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் வங்கதேச அணி முதல்முறையாக நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.