273 ரன்கள்.. 90 பந்துகள் மீதம்.. ஆப்கனை புரட்டி எடுத்தது இந்தியா.. பாக்-கை புள்ளி பட்டியலில் தாண்டி அசத்தல்!

0
2053
Rohit

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று டெல்லியில் இந்திய அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதிக்கொண்ட போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்ய வந்த ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இப்ராகிம் ஜட்ரன் 22 மற்றும் ரகமனுல்லா குர்பாஸ் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். அடுத்து வந்த ரஹமத் ஷா 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாகிதி மற்றும் ஓமர்சாய் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். ஓமர்சாய் 69 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 62 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இதற்குப் பிறகு ஆப்கானிஸ்தான் அணிக்கு பெரிய பங்களிப்புகள் யாரிடமும் இல்லை. கேப்டன் ஷாகிதி 80 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து நஜிபுல்லா ஜெட்ரன் 2, முகமது நபி 19, ரஷித் கான் 16, முஜீப் 10, நவீன் உல் ஹக் 9 ரன்கள் எடுக்க, ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில், எட்டு விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் பும்ரா பத்து ஓவர்களில், 39 ரன்களுக்கு நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து களம் இறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியான துவக்கத்தை கொடுத்தார். மிகச் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் துவக்க ஜோடி 156 ரன்கள் எடுத்தது. இஷான் கிசான் 47 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

மிகச் சிறப்பாக விளையாடி 63 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்த ரோகித் சர்மா 84 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 131 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். விராட் கோலி உடன் 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது.

இதற்கு அடுத்து விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் வெற்றியை நோக்கி விளையாட தொடங்கினர். இறுதியாக ஸ்ரேயாஸ் ஐயர் 23 பந்துகளில் 25 ரன்கள் எடுக்க, விராட் கோலி 56 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இந்திய அணி 35 ஓவர்களில் 273 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்றது.

தற்போது புள்ளி பட்டியலில் 4 புள்ளிகள் உடன் இந்திய அணி பாகிஸ்தான் அணியை தாண்டி இரண்டாவது இடம் பெற்றுள்ளது. 4 புள்ளிகள் உடன் ரன் ரேட்டில் நியூசிலாந்து அணி முதல் இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் அணி 4 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அடுத்த மூன்று இடங்களில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து பங்களாதேஷ் ஆகிய அணிகள் 2 போட்டிகளில் ஒரு வெற்றி உடன், 2 புள்ளிகள் எடுத்து தொடர்கின்றன.