29.3 ஓவரில் 264 ரன்கள்; வெஸ்ட் இண்டீஸை பறக்க விட்டு க்ளாசன் 54 பந்தில் அதிரடி சதம்!

0
2431
Klaasen

வெஸ்ட் இண்டீஸ் அணி தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி தோற்று தற்பொழுது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி முடித்திருக்கிறது!

இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட, இரண்டாவது போட்டியில் 300 ரன்கள் குவித்து ஷாய் ஹோப் சத உதவியுடன் தென் ஆப்பிரிக்கா அணியை அபாரமாக வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் அணி.

- Advertisement -

இதற்கு அடுத்து இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை வென்றால் தொடரை சமன் செய்யலாம் என்று தென் ஆப்பிரிக்க அணியும், இந்த போட்டியை வென்றால் தொடரை வெல்லலாம் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியும் களம் கண்டன.

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் வந்து வீச்சை தேர்வு செய்தது. மேயர்ஸ் 14 ரன்கள், ப்ரூக்ஸ் 18 ரன்கள், ஷாய் ஹோப் 16 ரன்கள், நிக்கோலஸ் பூரன் 39 ரன்கள், ரோமன் பவல் 2 ரன்கள், ஜேசன் ஹோல்டர் 36 ரன்கள் என எடுத்து வெளியேற, துவக்க ஆட்டக்காரர் ப்ரெண்டன் கிங் சிறப்பாக விளையாடி 72 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 72 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெஸ்ட் இண்டிஸ் அணி 260 ரன்கள் சேர்த்தது. ஜான்சென், பார்ட்டியூன், கோட்சி தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தை வென்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு 87 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் காலி ஆகிவிட்டது. மேற்கொண்டு இரண்டொரு விக்கட்டுகளை கைப்பற்றினால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஒருநாள் தொடர் கையில் கிடைக்கும் நிலை இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் ஆறாவது விக்கட்டுக்கு விக்கெட் கீப்பர் கிளாசன் மற்றும் வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஜான்சென் இருவரும் சேர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியை மொத்தமாக போட்டியிலிருந்து அப்படியே வெளியேற்றி விட்டார்கள். மிக அபாரமாக விளையாடிய இந்த ஜோடி 106 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இதில் மிகச் சிறப்பாக அதிரடியாக விளையாடிய விக்கெட் கீப்பர் க்ளாசன் 54 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்து மிரட்டினார். 61 பந்துகளை சந்தித்த அவர் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 15 பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 119 ரன்கள் குவித்தார். இவருடன் சேர்ந்து விளையாடிய ஜான்சென் 33 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

முடிவில் தென் ஆப்பிரிக்க அணி ஆறு விக்கட்டுகள் இழப்பிற்கு 264 ரன்களை வெறும் 29.3 ஓவரில் சேர்த்து அபார வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை 1-1 என சமன் செய்தது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் பவுமா தனியாளாக நின்று அதிரடியாக 144 ரன்கள் குவித்த போதிலும், மற்ற யாருடைய ஒத்துழைப்பும் இல்லாத காரணத்தால் தோல்வி அடைய வேண்டியதாக இருந்தது. தற்பொழுது இதற்கு தென்னாப்பிரிக்க அணி சரியான பதிலடியைத் திருப்பி தந்திருக்கிறது!