தற்பொழுது இந்திய அணி சூரியகுமார் யாதவ் தலைமையில் தென் ஆப்பிரிக்காவில் அந்த அணியை சந்தித்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டியில் சீனியர் வீரர்கள் யாரும் பேட்டிங் யூனிட்டில் இடம் பெறவில்லை.
அடுத்த வருடம் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இப்படியான முடிவை எடுத்து, இளம் வீரர்களுக்கு அதிகப்படியான வாய்ப்பைக் கொடுத்து விளையாட விட்டு இருக்கிறது. டி20 கிரிக்கெட்டுக்கு இளம் ரத்தம் தேவை என இந்திய கிரிக்கெட் நிர்வாகம் நடக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் மூன்று போட்டிகள் திலக் வர்மா விளையாட, கடைசி இரண்டு போட்டிகளில் அவரது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடினார். ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதலில் திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் அவரே முதன்மையாக தேர்வில் இருக்கிறார் என்று தெரிகிறது.
மேலும் கில் வந்ததும் ருதுராஜிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு வெளியில் அமர வைக்கப்பட்டு இருக்கிறார். ஆஸ்திரேலியா தொடரில் ஆரம்பத்தில் இஷான் கிஷான் விளையாட ஜிதேஷ் சர்மா வெளியில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போதைய இந்திய அணியில் வெளியில் செல்லாமல் விளையாடக்கூடிய இளம் வீரர்களாக இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒருவர் ஜெய்ஸ்வால். மற்றொருவர் ரிங்கு சிங். ஒருவர் போட்டியை ஆரம்பிக்கிறார் ஒருவர் பேட்டிங்கில் போட்டியை முடித்து வைக்கிறார். இவர்கள் இருவருமே டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என்று கணிக்கப்படுகிறது.
இதில் ரிங்கு சிங் எவ்வாறு கடினப்பட்டு உழைத்து மேலே வந்திருக்கிறார்? அவர் தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் எப்படி பயன்படுத்துகிறார்? என்பது குறித்து அவர் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் கொல்கத்தா அணிக்கு தற்பொழுது மென்டராக வந்திருக்கும் கம்பீர் பேசி இருக்கிறார்.
ரிங்கு சிங் குறித்து கம்பீர் பேசும் பொழுது “அவர் நிறைய கடினப்பட்டு உழைத்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். நீங்கள் முதல் தர கிரிக்கெட்டில் ஆரம்பித்து ஒவ்வொரு கட்டமாக சிறப்பாக விளையாடும் பொழுது, உங்களுடைய ஒவ்வொரு ஆட்டத்திற்கும் நீங்கள் மதிப்பு தருவீர்கள். பிறகு ஒவ்வொரு இன்னிங்சையும் உங்கள் முதல் இன்னிங்ஸ் போலவே அணுகுவீர்கள்.
ரிங்கு சிங் எந்த வெற்றி பெற்றாலும் அதற்கு அவர் தகுதியானவர் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர் எதையும் எளிதாகப் பெறவில்லை. அவர் நன்றாக செய்தால் அவர் மட்டுமல்ல மொத்த நாடும் மகிழ்ச்சி அடைகிறது!” என்று கூறி இருக்கிறார்!