2024 இந்தியா ஆஸி டெஸ்ட் தொடர் அட்டவணை வெளியானது.. ரோகித் படைக்கு ஸ்பெஷல் வியூகம்

0
225
Rohit

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் உலக கிரிக்கெட்டில் மிகவும் புகழ்பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடராக மாறி வருகிறது. கடந்த ஐந்து முறையாக இந்த டெஸ்ட் தொடர் இந்தியாவின் கைவசம் இருக்கிறது. எனவே இதன் காரணமாக இந்த தொடரை எப்படியாவது கைப்பற்ற ஆஸ்திரேலியா கிரிக்கெட் திட்டமிட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு இறுதியில் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடுகிறது. இதில் கிறிஸ்துமஸ்க்கு அடுத்த நாள் வரும் பாக்சிங் டேட் டெஸ்ட், மற்றும் புத்தாண்டு டெஸ்ட் என, உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய சுவாரசிய கிரிக்கெட் காத்துக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

தற்போது உலக டெஸ்ட் சாம்பியன் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் சாம்பியன் ஆக பாட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலியா அணி இருந்து வருகிறது. இந்த இரண்டு சாம்பியன் பட்டங்களையும் இறுதிப்போட்டியில் இந்தியாவிற்கு எதிராக வென்றுதான் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றி இருக்கிறது. ஆனாலும் அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தரும் முக்கியத்துவம் காரணமாக, தங்களது சொந்த நாட்டில் இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்ததை, அவமானமாகவே கருதுகிறார்கள்.

இதனால் இந்த முறை ஆஸ்திரேலியா வரும் இந்திய அணியை உள்நாட்டில் வைத்து எப்படியாவது தோற்கடித்து டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்கின்ற நோக்கத்தில், அவர்கள் இதற்கான அட்டவணையை தயாரித்திருக்கிறார்கள். ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை கடினமாக மாற்றுவதன் மூலம், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியும் என நம்புகிறார்கள்.

- Advertisement -

எனவே முதல் டெஸ்ட் போட்டியை கிரிக்கெட் உலகின் அதிவேக ஆடுகளத்தை கொண்ட பெர்த் மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியை அடிலைட் மைதானத்தில் பகல் இரவு டெஸ்ட் போட்டியாகவும் நடத்த அட்டவணையை தயாரித்து இருக்கிறார்கள். ஆஸ்திரேலியா அணி பகல் இரவு டெஸ்ட் போட்டியில் தோற்றதே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் சுழல் பந்து வீச்சுக்கு கொஞ்சம் ஒத்துழைக்கக் கூடிய சிட்னி மைதானத்தில் கடைசி டெஸ்ட் போட்டியை நடத்துகிறார்கள். இப்படி அட்டவணையை தயாரித்ததிலேயே, இந்திய அணிக்கு எதிராக வியூகத்தை வகுத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க : 10 பந்துக்கு 28 ரன்.. ரிங்கு சிங்கை பார்த்து கத்துக்கிட்டேன் – தினேஷ் கார்த்திக் பேட்டி

2024 இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் அட்டவணை :

பெர்த் – நவம்பர் – 22 – 26
அடிலைட் – டிசம்பர் – 6 – 10
பிரிஸ்பேன் – டிசம்பர் – 14 – 18
மெல்போன் – டிசம்பர் – 26 – 30
சிட்னி – ஜனவரி 2025 – 3 – 7

- Advertisement -