2012 சச்சின்.. 2023 கில்.. ஆசிய கோப்பையில் திரில் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பங்களாதேஷ் ஆறுதல் வெற்றி!

0
2084
Gill

இன்று ஆசியக்கோப்பை தொடரின் இரண்டாவது சுற்றின் கடைசிப் போட்டியில், இந்தியாவுக்கு எதிராக விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், பங்களாதேஷ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றிருக்கிறது!

இந்திய அணி இந்த போட்டிக்கு முன்பாகவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்ட காரணத்தினால், இந்திய அணியின் முக்கிய ஐந்து வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து, திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா, முகமது சமி, சரதுல் தாகூர், சூரியகுமார் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்தது.

- Advertisement -

டாஸ் வென்று முதலில் இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது. பங்களாதேஷ் அணிக்கு கேப்டன் ஷகிப் அல் ஹசன் 80 பந்துகளில் 85 ரன்கள், தவ்ஹீத் 54 ரன்கள், நசும் அகமத் 44 ரன்கள் எடுக்க, 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் பங்களாதேஷ் அணி எடுத்தது. இந்திய தரப்பில் சர்துல் தாக்கூர் மூன்று விக்கெட்டுகள், முகமது சமி இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இதற்கு அடுத்து வந்த அறிமுக வீரர் திலக் வர்மா 5, கேஎல்.ராகுல் 19, இஷான் கிஷான் 5, சூரியகுமார் யாதவ் 26, ரவீந்திர ஜடேஜா 7 என்று வெளியேறினார்கள்.

ஒரு பக்கத்தில் அக்சர் படேலை உடன் வைத்துக் கொண்டு சுப்மன் கில் மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 133 பந்துகளில் 8 பவுண்டரி 5 சிக்ஸர்கள் உடன் 121 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து பொறுப்பை எடுத்துக் கொண்ட அக்சர் படேல் ஒருபுறம் சிறப்பாக விளையாட, கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. 49 வது ஓவரை முஸ்தஃபிசூர் ரஹமான் வீச, முதல் பந்தில் சர்துல் தாக்கூர் ஆட்டம் இழந்தார். அடுத்து அதே ஓவரில் ஒரு பவுண்டரி அடித்து அக்சர் படேலும் ஆட்டம் இழந்தார்.

இதற்கடுத்து வெற்றிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் மூன்று பந்துகளை விட்டு நான்காவது பந்தில் முகமது சமி பவுண்டரி அடித்தார். ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள் ஓட முயற்சி செய்து அவர் ஆட்டம் இழக்க, இந்திய அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பங்களாதேஷ அணி பரபரப்பான ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

2012 ஆம் ஆண்டு ஆசியக்கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக சச்சின் சதம் அடிக்க, அந்தப் போட்டியில் இந்தியா தோற்று இருந்தது. தற்போது கில் சதம் பங்களாதேஷுக்கு எதிராக அடிக்க ஆசிய கோப்பையில் இந்திய அணி தோற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, 16வது ஆசிய கோப்பையின் இறுதி போட்டியில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் மோதிக்கொள்ள இருக்கின்றன!