20 வருட சோகம் முடிந்தது.. தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி.. நியூசிலாந்துக்கு அரை இறுதிக்கு வாய்ப்பு எப்படி இருக்கு?

0
752
Odi wc

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் புனே மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து கேப்டன் தனது அணி பந்து வீசும் என அறிவித்தார். இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை விட நியூசிலாந்துக்கு மிக முக்கியமான போட்டியாக அமைந்தது.

- Advertisement -

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்கம் தர வந்த கேப்டன் டெம்பா பவுமா 24 ரன்களில் வெளியேறினார். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த குயின்டன் டி காக் மற்றும் வான்டர் டேசன் ஜோடி 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் நான்காவது சதத்தை அடித்த குயின்டன் டி காக் 116 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 114 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவருடன் இணைந்து விளையாடிய வான்டர் டேசன் 118 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 133 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து வந்த டேவிட் மில்லர் அதிரடியாக 30 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். கிளாசன் 15, மார்க்ரம் 6 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்க, 50 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து பெரிய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு டெவோன் கான்வே 2, வில் யங் 33, ரச்சின் ரவீந்தரா 9, டேரில் மிட்சல் 24, டாம் லாதம் 4, மிட்சல் சான்ட்னர் 7, டிம் சவுதி 7, ஜேம்ஸ் நீசம் 0, டிரண்ட் போல்ட் 9, கிளன் பிலிப்ஸ் 60, ஹென்றி 0* ரன்கள் எடுக்க, 35.3 ஓவர்களில் 167 ரன்கள் மட்டும் எடுத்து 190 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து படுதோல்வி அடைந்தது.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் கடந்த 20 வருடங்களாக நியூசிலாந்து அணியை தென்னாப்பிரிக்கா அணி வென்றதில்லை என்கின்ற பரிதாப நிலைக்கு இன்று முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. மேலும் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

இந்த தோல்வியின் மூலமாக நியூசிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்புக்கு சற்று சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த போட்டியில் அந்த அணியின் ரன் ரேட் அடிவாங்கி இருக்கிறது. அடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!