இன்று ஆசஸ் டெஸ்ட் தொடரில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மெல்போன் மைதானத்தில் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டியில் முதல் நாளில் மட்டும் 20 விக்கெட்டுகள் விழுந்து விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஏற்கனவே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளை தோற்று தொடரை இங்கிலாந்து இழந்து இருந்தது. இந்த நிலையில் ஆறுதல் வெற்றிக்காக இங்கிலாந்து களம் இறங்கியது.
விக்கெட் சரிவு
முதலில் பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்த ஆடுகளத்தில் தடுமாறியது. இதனால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 45.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து அணியின் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் டங் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார். இன்னொரு வேகப்பந்துவீச்சாளர் அட்கின்சன் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
முதல் நாளில் இரண்டாவது இன்னிங்ஸ்
இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை விளையாட வந்த இங்கிலாந்து 29.5 ஓவரில் 110 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இதில் ஹாரி புரூக் 41 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா பந்துவீச்சில் நேசர் 4 மற்றும் போலந்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
இதைத்தொடர்ந்து முதல் நாளிலேயே ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸை விளையாட வந்தது. இன்றைய நாளில் ஒரு ஓவர் மட்டுமே மீதம் இருந்ததால், ஆஸ்திரேலியா ஹெட் உடன் துவக்க ஆட்டக்காரராக பந்துவீச்சாளர் போலண்டை களம் இறக்கியது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பில்லாமல் இரண்டாவது இன்னிங்ஸில் 4 ரன்கள் எடுத்திருக்கிறது.
இதையும் படிங்க : மெக்கலம் பயிற்சியாளராக இருக்க தகுதி இல்லாதவர்.. டிராவிட்டை பார்த்து கற்றுக்கொள்ளனும் – சடகோபன் ரமேஷ் விமர்சனம்
உலகெங்கும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களால் கிறிஸ்மஸ் முடிந்த அடுத்த நாளில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு பெரிய வரவேற்பு இருக்கும். இப்படிப்பட்ட பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் மட்டுமே 20 விக்கெட்டுகள் விழுந்திருப்பது ரசிகர்களை அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால் வெளியில் இருந்து நிறைய விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.






