நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் அப்செட் நடந்திருக்கிறது. நேற்று அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் அமெரிக்க அணி பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இரண்டு முன்னாள் இந்திய உள்நாட்டு வீரர்கள் இருந்திருக்கிறார்கள்.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி பவர் பிளேவில் தடுமாறியது. மூன்று விக்கெட்டுகளையும் இழந்தது. மேற்கொண்டு வந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 159 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கடைசி நேரத்தில் சதாப்கான் மற்றும் ஷாகின் அப்ரிடி அதிரடியால் இந்த ரன்கள் வந்தது. பாபர் அசாம் அதிகபட்சமாக மிக மெதுவாக 43 பந்தில் 44 ரன்கள் எடுத்தார்.
இதற்கு அடுத்து விளையாடிய அமெரிக்க அணிக்கு அந்த அணியின் கேப்டன் மோனன்க் படேல் அதிரடியாக 38 பந்தில் 50 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அமெரிக்க அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக ஆட்டம் டிராவில் முடிய சூப்பர் ஓவர் வந்தது.
சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 18 ரன்கள் சேர்த்தது. எக்ஸ்ட்ரா வகையில் மட்டும் பாகிஸ்தான் ஏழு ரன்கள் கொடுத்தது. இதற்கு அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணியால் 13 ரன்கள் மட்டுமே ஒரு விக்கெட் இழப்புக்கு எடுக்க முடிந்தது. முடிவில் அமெரிக்க அணி அபாரமான முறையில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த அணிக்கு விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக மோனன்க் படேல் இருக்கிறார். இவர் குஜராத்தில் பிறந்து குஜராத் 16 வயது மற்றும் 18 வயது அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். பின்பு 2010ம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்து, 2019 ஆம் ஆண்டு அமெரிக்க அணிக்காக அறிமுகமானார். மேலும் அமெரிக்க அணிக்கு கேப்டனாக உயர்ந்து, இன்றைய போட்டியில் அதிரடியாக அரை சதம் அடித்ததோடு, அணியை சிறப்பாக வழி நடத்தி வெற்றி பெறவும் வைத்து ஆட்டநாயகன் விருது பெற்றிருக்கிறார்.
இதையும் படிங்க : நான் முன்னையே முடிவு பண்ணிட்டேன்.. பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது இப்படித்தான் – அமெரிக்கா கேப்டன் பேச்சு
மேலும் அமெரிக்க அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளராக சௌரப் நெட்ரவால்கர் இருக்கிறார். இவர் மும்பை மாநில அணிக்காக 2013-14 ஆம் ஆண்டு ரஞ்சித் டிராபியில் அறிமுகமானார். இதே ஆண்டு மும்பை மாநில அணிக்காக லிஸ்ட் ஏ மற்றும் விஜய் ஹசாரே ட்ராபிலும் அறிமுகமானார். மேலும் இவர் 2010 ஆம் ஆண்டு அண்டர் 19 இந்திய அணி உலகக்கோப்பையில் விளையாடியிருக்கிறார். இன்றைய போட்டியில் நான்கு ஓவர் பந்துவீசி 18 ரன் மற்றும் விட்டுத்தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார். மேலும் சூப்பர் ஓவரை வீசி 13 ரன்கள் மட்டுமே விட்டு தந்து, அமெரிக்க அணிக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்