18வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கி இருக்கிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் கேகேஆர் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி மகத்தான வெற்றியை பெற்று இருக்கிறது. இதன்பின் இன்று இரவு வலிமை வாய்ந்த மும்பை அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி களமிறங்கவுள்ளது.
இந்த சூழலில் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் தமிழக வீரர்களின் எண்ணிக்கை ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளுக்காகவும் தமிழக வீரர்கள் விளையாடி வருகிறார்கள். அதிகபட்சமாக குஜராத் மற்றும் சிஎஸ்கே அணிகளில் 4 தமிழர்கள் இடம்பிடித்து அசத்தி இருக்கிறார்கள்.
சிஎஸ்கே வந்த அஸ்வின்
அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டின் நட்சத்திர வீரரான நடராஜன் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாட ரூ.10.75 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சீனியர் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் ரூ.9.75 கோடிக்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டுள்ளார். 9 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சென்னை அணிக்கு களமிறங்க இருக்கிறார்.
அதேபோல் இளம் சுழற்பந்துவீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் ரூ.3.20 கோடிக்கு குஜராத் அணியாலும், சாய் கிஷோர் ரூ.2 கோடிக்கு குஜராத் அணியாலும் வாங்கப்பட்டுள்ளனர். ரஞ்சி டிராபியில் தமிழக அணிக்காக ஆடி வரும் குர்ஜப்னீத் சிங் ரூ.2.2 கோடிக்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டுள்ளார். அதேபோல் அனுபவ வீரர் விஜய் சங்கர் ரூ.1.2 கோடிக்கு சிஎஸ்கே அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
எத்தனை வீரர்கள்?
அதேபோல் குல்தீப் சென் ரூ.80 லட்சத்திற்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார். இளம் ஸ்பின்னரான மணிமாறன் சித்தார்த் ரூ.75 லட்சத்திற்கு லக்னோ அணியாலும், 18வயதாகும் இளம் வீரர் ஆன்ட்ரே சித்தார்த் ரூ.30 லட்சத்திற்கு சிஎஸ்கே அணியாலும் வாங்கப்பட்டுள்ளனர். அதேபோல் வருண் சக்கரவர்த்தி ரூ.11 கோடிக்கு கேகேஆர் அணியால் ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் சாய் சுதர்சன் ரூ.11 கோடிக்கு குஜராத் அணியாலும், ஷாருக்கான் ரூ.4 கோடிக்கு குஜராத் அணியாலும் ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 12 வீரர்கள் ஐபிஎல் தொடரில் தமிழ்நாட்டில் இருந்து விளையாடி வருகிறார்கள். இதனால் அவர்களின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.






