1, 6, 6, 6, 6, 6 ; கடைசி ஐந்து பந்தில் 5 சிக்ஸர் ; ரிங்கு சிங் மேஜிக் பேட்டிங்கால் கொல்கத்தா வெற்றி!

0
1360
KKR

கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகள் தங்களது மூன்றாவது ஆட்டத்தில், இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் மோதிக்கொண்டன. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழக வீரர்கள் மூன்று பேர் மிகச் சிறப்பாக விளையாடினர்!

ஹர்திக் பாண்டியா விளையாடாத நிலையில் ரசித் கான் டாஸ் வென்று தங்களது அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். சகா 17 ரன் கில் 39 ரன், அபினவ் மனோகர்14 ரன், சாய் சுதர்சன் 53 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

இறுதி நேரத்தில் மிகச் சிறப்பான அதிரடியை விஜய் சங்கர் காட்டி 24 பந்தில் 63 ரன்கள் குவிக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் அணி 204 ரன்கள் சேர்த்தது. குஜராத் அணியின் அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் இதுதான். விஜய் சங்கர் 21 பந்தில் இந்த ஆட்டத்தில் அடித்த அரை சதமே குஜராத் அணிக்கு அதிவேக அரை சதம் ஆகும். கொல்கத்தா தரப்பில் நான்கு ஓவர்களில் 33 ரன்கள் தந்து சுனில் நரைன் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அடுத்து மிகப்பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய குஜராத் அணிக்கு குர்பாஷ் 15, ஜெகதீசன் 6 ரன் என வெளியேறினார்கள். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த வெங்கடேஷ், நிதிஷ் ரானா இருவரும் மிகச் சிறப்பான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரும் நான்காவது விக்கட்டுக்கு நூறு ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள். வெங்கடேஷ் 26 பந்தில் அரை சதத்தை எட்டினார்.

சிறப்பாக விளையாடிய கேப்டன் நிதிஷ் ரானா 29 பந்தில் 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் 40 பந்தில் 83 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதுவரை கொல்கத்தா கையில் இருந்த ஆட்டம் அடுத்து அப்படியே குஜராத் பக்கம் திரும்பியது.

- Advertisement -

இந்த நிலையில் நான்கு ஓவர்கள் மீதமிருக்க ஆட்டத்தின் 17 வது ஓவரை கேப்டன் ரசீத் கான் வீச வந்தார். அப்பொழுது வெற்றிக்கு நான்கு ஓவர்களில் 50 ரன்கள் தேவைப்பட்டன. ஓவரின் முதல் பந்தில் ஆண்ட்ரூ ரசலை வெளியேற்றி, அடுத்த பந்தில் சுனில் நரைனையும், அதற்கு அடுத்த பந்தில் சர்துல் தாக்கூரையும் வெளியேற்றி ஹாட்ரிக் எடுத்து அசத்தினார். அந்த ஓவரில் இரண்டு ரன்கள் மட்டுமே தந்தார். இது ஐபிஎல் தொடரில் 23ஆவது ஹாட்ரிக் ஆகும். கேப்டன் கைப்பற்றிய நான்காவது ஹாட்ரிக் ஆகும். இதற்கு முன்பு யுவராஜ் சிங் இரண்டு முறை மற்றும் ஷேன் வாட்சன் ஒரு முறை ஹாட்ரிக் எடுத்து இருக்கிறார்கள்

ரஷீத் கானின் மிகச்சிறப்பான ஓவரால் கொல்கத்தா அணியின் வெற்றி மிக சிக்கலானது. இந்த நிலையில் கடைசி ஓவருக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை யாஷ் தயால் வீச முதல் பந்தை சந்தித்த உமேஷ் யாதவ் ஒரு ரன்கள் எடுத்து ரிங்கு சிங் விளையாட வந்தார்.

இதற்கு அடுத்து நடந்த எல்லாமே மேஜிக். எக்ஸ்ட்ரா கவர் திசையில் ஒரு சிக்ஸர் ; லாங் லெக் திசையில் ஒரு சிக்ஸர். மீண்டும் எக்ஸ்ட்ரா கவர் திசையில் ஒரு சிக்ஸர். தொடர்ந்து லாங் ஆன் திசையில் ரெண்டு சிக்ஸர். கடைசி ஐந்து பந்தில் யாருமே எதிர்பார்க்காத படி ஐந்து சிக்ஸகளை விளாசி கொல்கத்தா அணியை அபார வெற்றி பெற வைத்தார் ரிங்கு சிங். ஐபிஎல் வரலாற்றில் மறக்க முடியாத போட்டிகளில் இந்த போட்டி இடம் பெறுவது உறுதி!