இன்று 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி சாம்பியன் ஆனது. இந்த போட்டியில் 80 பந்தில் 175 ரன்கள் குவித்த வைபவ் சூரியவன்சி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த போட்டியில் டாஸ் வெற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 311 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக வென்றது.
இவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்
இந்த வெற்றி குறித்து பேசி உள்ள வைபவ் சூரியவன்சி “நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். நாங்கள் செய்த தயாரிப்புகள் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃகளின் உழைப்பு, விளையாடிய அனைத்து போட்டிகள், ஆசியக் கோப்பை மற்றும் அதற்குப் பிறகு வந்த தொடர்கள் எல்லாம்தான் எங்களை இங்கே கொண்டு வந்திருக்கிறது. இந்த விருதை எங்கள் அணியின் சப்போர்ட் ஸ்டாஃப்களுக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன்”
“என்னுடைய முக்கியமான நோக்கம் தேவையில்லாத அழுத்தத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதுதான். நம் மேல் நம்பிக்கை வைத்து, தொடக்கத்தில் இருந்து பின்பற்றி வந்த செயல்முறையின் மீது நம்பிக்கை வைப்பதும்தான் முடிவாக இருந்தது”
அப்போதே ஆரம்பித்துவிட்டது
“இந்த உலகக் கோப்பைக்கு நாங்கள் ஆசிய கோப்பை முடிவடைந்ததுமே தயாராக ஆரம்பித்து விட்டோம். கடந்த 9 மாதங்களாக நாங்களும் எங்களுடைய அணியின் ஊழியர்களும் சேர்ந்து கடுமையாக உழைத்து வந்தோம். அந்த தயாரிப்பு தான் எங்களை இப்போது இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது”
இதையும் படிங்க : U19 உகோ பைனல்.. சூரியவன்சியின் சூறாவளி பேட்டிங்கில் இந்திய அணி சாம்பியன்.. 6வது முறையாக அசத்தல்
“நான் உருவாக்கிக் கொண்ட திறமைகளின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. பெரிய தருணங்களிலும் அழுத்தமான நேரங்களிலும் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்று தெரியும். அதனால் நம்பிக்கையை விடாமல் தொடர்ந்து என்னை நம்பிக் கொண்டே இருந்தேன்” என்று கூறியிருக்கிறார்.






