கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

304 ரன்களை சேஸ் செய்து பங்களாதேசை மீண்டும் பந்தாடிய ஜிம்பாப்வே; இரண்டு அபார சதங்கள்!

ஜிம்பாப்வேற்குப் பங்களாதேஷ் அணி சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த டி20 போட்டி தொடரை 2-1 என ஜிம்பாப்வே அணி கைப்பற்றி இருந்தது!

- Advertisement -

இதையடுத்து இன்று ஹராரே நகரில் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான டாஸில் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் ரெஜிஸ் சகபவா பந்துவீச்சை தேர்வு செய்தார்!

முதலில் பேட் செய்ய பங்களாதேசின் கேப்டன் தமிம் இக்பால் – லிட்டன்தாஸ் ஜோடி களம் புகுந்தது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 119 ரன்ள் சேர்த்தனர். தமிம் இக்பால் 62 ரன்னில் வெளியேறினார். அடுத்து லிட்டன் தாஸ் 81 ரன்களில் ரிடையர்ட் ஹர்ட் ஆனால். இதற்கடுத்து வந்த அனாமுல் ஹக் 73, முஸ்பிகிர் ரஹிம் 52 என அரைசதங்கள் அடிக்க, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் பங்களாதேஷ் அணி இரண்டு விக்கெட்டு இழப்பிற்கு 303 ரன்களை குவித்தது!

இதையடுத்து 304 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி முதல் மூன்று விக்கெட்டுகளை 62 ரன்களுக்குள் இழந்துவிட்டது. இதற்கடுத்து ஜோடி சேர்ந்த இன்னசன்ட் கய்யா, சிக்கந்தர் ராஸா ஜோடி மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்பில் ஈடுபட்டு அசத்தியது. இருவரும் சேர்ந்து நான்காவது விக்கெட்டுக்கு 192 ரன்கள் சேர்த்தார்கள்.

- Advertisement -

இறுதியில் பத்துப் பந்துகள் மீதமிருக்க ஜிம்பாப்வே அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது. இன்னசன்ட் கய்யா 122 பந்துகளில் இரண்டு சிக்ஸர் பதினொரு பவுண்டரிகளோடு 110 ரன்கள் சேர்த்தார். இறுதிவரை ஆட்டமிழக்காத சிக்கந்தர் ராஸா 109 பந்துகளில் எட்டு பவுண்டரி, ஆறு சிக்ஸர்களோடு 135 ரன்கள் குவித்தார். இவரே ஆட்டநாயகனாவும் அறிவிக்கப்பட்டார். தற்போது ஜிம்பாப்வே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது!

Published by