தற்போது ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் மென்டராக பொறுப்பேற்று இருக்கும் இந்திய முன்னாள் வீரர் ஜாகிர் கான் மகேந்திர சிங் தோனி குறித்து மிகப்பெரிய பாராட்டை தெரிவித்திருக்கிறார். மேலும் தங்கள் அணியில் வீரர்களுக்கு ஏற்பட்டிருக்கும் காயம் குறித்தும் பேசியிருக்கிறார்.
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி நிர்வாகம் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு மென்டராக ஜாகிர் கானை நியமித்திருக்கிறது. மேலும் அவர் இதற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் குழுவில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் லக்னோ அணிக்கு ரிஷப் பண்ட் 27 கோடி ரூபாய்க்கு அதிகபட்ச விலை கொடுத்து வாங்கப்பட்டு கேப்டன் ஆக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த கால வரலாறு
கடந்த ஐபிஎல் சீசன்களில் லக்னோ அணியின் சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணி விளையாடிய பொழுது மிகப்பெரிய அளவில் தோனிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்து வந்து ரசிகர்கள் ஆச்சரியப்படுத்தினார்கள். போட்டி சேப்பாக்கத்தில் நடக்கிறதா அல்லது லக்னோ ஏக்னா மைதானத்தில் நடக்கிறதா? என்று குழப்பமடையும் அளவுக்கு நிலைமை இருந்தது.
இந்த நிலையில் இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை லக்னோ அணியின் மென்டர் ஜாகிர் கான் எதிர்கொண்டார். அவரிடம் இந்த முறை மைதானத்தில் நீலக்கடலை எதிர்பார்க்கலாமா? என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு ஜாகிர் கான் மிகவும் சுவாரசியமான ஒரு பதிலை தந்து சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறார்.
தோனிதான் எங்கும் ஆள்வார்
இதுகுறித்து பதில் அளித்த ஜாகிர் கான் பேசும்பொழுது “ஐபிஎல் தொடரில் தோனி விளையாடும் வரை எல்லா மைதானங்களிலும் மஞ்சளே ஆதிக்கம் செலுத்தும். அப்படித்தான் நடக்க வாய்ப்பு இருக்கிறது. அவர் அனைவராலும் விரும்பப்படக்கூடிய ஒருவராக இருக்கிறார். இதன் காரணமாக சிஎஸ்கே அணி எந்த மைதானத்தில் விளையாடினாலும், அங்கு மஞ்சள் கடல்தான் இருக்கும்”
இதையும் படிங்க : தோனி இந்த ஐபிஎல்ல 2 விஷயத்துல ஒன்ன செய்வாரு.. அதுக்கு யாரும் ஆச்சரியப்படாதிங்க – ராபின் உத்தப்பா பேச்சு
“ஐபிஎல் தொடரில் வீரர்களின் காயங்களால் நிச்சயமற்ற தன்மை என்பது நிதர்சனமானது. தற்போது எங்களுடைய பயிற்சியாளர் குழுவில் இருப்பவர்கள் எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்களுடன் இணைந்து வேலைகள் செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த சீசனுக்கான திட்டத்தை நாங்கள் வைத்திருக்கிறோம். எங்களிடம் மொத்தம் 24 வீரர்கள் இருக்கிறார்கள். போட்டிகளை எப்படி வெல்ல வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்” என்று கூறி இருக்கிறார்.






