இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளராக இருந்து வந்த யுஸ்வேந்திர சாகல் தற்போது உலகின் மிகச்சிறந்த ரிஸ்ட் ஸ்பின்னர் யார் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டில் திறமை இருந்தும் பிளேயிங் லெவனில் காம்பினேஷன் காரணமாக இடம்பெற முடியாமல் போனவர்களில் யுஸ்வேந்திர சாகல் மிகவும் முக்கியமானவராக இருக்கிறார். இந்தியாவைத் தவிர மற்ற அணியில் இருந்திருந்தால் நிச்சயம் அவர் விளையாடும் வாய்ப்பை பெற்றிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
யுஸ்வேந்திர சாகல் சோகம்
2021ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் கட்டாயம் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கழட்டி விடப்பட்டார். இந்தியாவில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அணியில் சேர்க்கப்படவில்லை. அதே சமயத்தில் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெற்றார். ஆனால் விளையாடும் வாய்ப்பை பெறவில்லை. அதற்குப் பிறகு மொத்தமாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
தற்பொழுது அவர் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டிலும், இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டிலும் விளையாடிக் கொண்டிருக்கிறார். மேலும் ஐபிஎல் தொடரில் இந்த முறை மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக நல்ல விலைக்கு வாங்கப்பட்டு இருக்கிறார். தற்போது இவர் பஞ்சாப் கிங்ஸ் அணி முகாமில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
யார் சிறந்த ரிஸ்ட் ஸ்பின்னர்?
இது குறித்து பேசி இருக்கும் யுஸ்வேந்திர சாகல் கூறும்பொழுது “என்னுடைய வாய்ப்பு என்பது என் கையில் இல்லாதது எனவே அதைப் பற்றி நான் பேசிக் கொண்டிருக்க முடியாது. தற்போது உலகின் நம்பர்-1 ரிஸ்ட் ஸ்பின்னர் ஆக குல்தீப் யாதவ் இருக்கிறார். சர்வதேச போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடரில் அவர் பந்து வீசும் முறையில், அவர் செயல்படும் விதத்தில் இது நிரூபணம் ஆகிறது”
இதையும் படிங்க : கேகேஆர் கோச் எழும்போது பிராவோ தூங்க போவார்.. கேப்டன் ரகானேவே பிரச்சனை – ஹர்பஜன் சிங் விமர்சனம்
“அவருடன் இணைந்து பந்து வீசுவது எனக்கு எப்பொழுதும் பிடித்த ஒன்றாக இருந்திருக்கிறது. நாங்கள் இருவரும் ஒரே மாதிரி தாக்குதல் பாணியில் பந்து வீசக்கூடியவர்கள். களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எங்களுக்கு நல்ல நட்பு பிணைப்பு இருக்கிறது. நான் அவருடன் இணைந்து பந்து வீசுவதை விரும்புவேன். ஏனென்றால் எங்களில் ஒருவர் விக்கெட்டுகளுக்காக தாக்கினால், இன்னொருவர் இன்னொரு முனையில் ரன் தராமல் இறுக்கமாக இருப்போம். எங்களுக்குள் அந்த அளவிற்கு புரிதல் இருந்தது” என்று கூறியிருக்கிறார்.






