பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் அந்த அணியை மீண்டும் உருவாக்க உதவி செய்யாமல், பணம் சம்பாதிப்பதற்காக கிரிக்கெட் வர்ணனைப் பெட்டியில் உட்கார்ந்து கொண்டு அசிங்கமாக பேசிக் கொண்டிருப்பதாக இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் வாசிம் அக்ரம் சோயப், அக்தர், முகமது ஹபீஸ் ஆகியோர் பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாதது குறித்து மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்ரம் அக்தர் செய்வது கேவலமானது
இதுகுறித்து யுவராஜ் சிங் தந்தை பேசும்பொழுது “வாசிம் அக்ரம் போன்ற பெரிய வீரர்கள் இப்படியான கேவலமான விஷயங்களை சொல்கிறார்கள். அவரைச் சுற்றி உள்ளவர்கள் அதைக் கேட்டு சிரிக்கிறார்கள். அக்தர் எவ்வளவு பெரிய வீரர். அவர் இந்திய வீரர்களுடன் பாகிஸ்தான் வீரர்களை ஒப்பிட்டு பேசிக் கொண்டிருக்கிறார். இது எவ்வளவு கேவலமான விஷயம். நீங்கள் இங்கு உட்கார்ந்து பணம் சம்பாதித்து கொண்டு இருப்பதை விட்டுவிட்டு, பாகிஸ்தான் சென்று முகாம் அமைத்து, உங்கள் அணி உலகக் கோப்பையை வெல்ல உதவி செய்யுங்கள்”
“நான் பாகிஸ்தான் சென்றால் ஒரே வருடத்தில் அந்த அணியை சிறப்பானதாக மாற்றுவேன். நீங்கள் அனைவரும் என்னை நினைவில் வைத்துக் கொள்வீர்கள். இது எல்லாம் பேரார்வத்தில் இருந்து வருகிறது. நான் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் பயிற்சி கொடுப்பேன். இதற்காக ரத்தத்தையும் வியர்வையையும் அர்ப்பணிக்க வேண்டும். கிரிக்கெட் வர்ணனைப் பெட்டியில் உட்கார்ந்து கொண்டு பேசுவது எந்த மாற்றத்தையும் உருவாக்காது”
உங்கள் வீரர்கள் பாவம்
“பல பாகிஸ்தான் வீரர்கள் வெளியே அமர்ந்து கொண்டு தங்கள் நாட்டு அணி பற்றியும் வீரர்கள் பற்றியும் பேசுகிறார்கள். இந்திய முன்னாள் வீரர்கள் இந்திய அணியை பற்றி இவ்வளவு கடுமையான வார்த்தைகளை பேசி நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? தற்போது பாகிஸ்தான் வீரர்கள் அழுத்தத்தில் தன்னம்பிக்கையில் குறைவாக இருக்கும் நேரத்தில் இப்படி பேசுவது இன்னும் அவர்களை பாதிப்படையவே செய்யும்”
இதையும் படிங்க : பும்ரா கிடையாது.. வலை பயிற்சியில் இவர் பந்துவீச்சை ஆடவே வெறுக்கிறேன் – கேஎல் ராகுல் கருத்து
“இப்போது பாகிஸ்தான் அணியை குறை கூறிக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோருமே யாரால் ஒருவரால் வந்தவர்கள்தான். குறிப்பாக இம்ரான் கான் பல வீரர்களை பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு கொண்டு வந்தார். நீங்களும் அதுபோல இந்த நேரத்தில் இருந்து வீரர்களுக்கு உதவி செய்து அவர்களை வெளியே கொண்டு வர வேண்டும். அதை விட்டுவிட்டு இப்படி பணத்திற்காக உட்கார்ந்து கொண்டு கேவலமாக பேசக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.






