இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரை அக்டோபரில் வைத்துக்கொண்டு, இன்னும் இந்திய அணி நிர்வாகம் தங்களுக்கான உலகக்கோப்பை அணியை இறுதி செய்யாமல் இருக்கிறது!
முன்னணி வீரர்களின் எதிர்பாராத காயம் இந்திய அணி நிர்வாகத்திற்கு உலகக் கோப்பைக்கான இந்திய அணியை இறுதி செய்வதில் பெரும் தலைவலியை கொடுத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் டி20 தொடரை வேறு இந்திய அணி இழந்தது பெரிய விமர்சனங்களை கொண்டு வந்திருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் இரண்டிலும் இந்திய அணி நிர்வாகம் உலகக்கோப்பைக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான ஆய்வுக் களமாக பயன்படுத்தியது.
இந்தத் தொடர்களில் சஞ்சு சாம்சன், இசான் கிஷான் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் வாய்ப்பு பெற்றார்கள். இந்த வாய்ப்பை அதிகபட்சமாக தவறவிட்டவராக சஞ்சு சாம்சன் இருக்கிறார். இரண்டாவது விக்கெட் கீப்பராக அவர் உலகக் கோப்பை இந்திய அணிக்கு தேர்வாவாரா? என்பது சந்தேகத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் உலகக் கோப்பை மற்றும் இந்திய வீரர்கள் பற்றி பேசி உள்ள கபில்தேவ் ” முகமது சிராஜ் மிகவும் திறமையான வீரராக இருக்கிறார். அதே சமயத்தில் அவர் ஷார்ட் பந்துகளை வீசும் போது கவனமாக இருக்க வேண்டும். அவர் அப்படியான பந்துகளை வீசும் போது எத்தனை முறை வெற்றிகரமாக இருந்திருக்கிறார்? என்று பார்க்க வேண்டும். மேலும் திட்டங்களுக்கு தகுந்தவாறு அவரது பந்துவீச்சை கூர்மையாக்கி கொள்ள வேண்டும்.
உள்நாட்டு கிரிக்கெட் என்பது மிக மிக முக்கியமானது. விராட் கோலி அல்லது ரோகித் சர்மா இல்லை மற்ற முன்னணி இந்திய வீரர்கள் சமீப காலங்களில் எத்தனை உள்நாட்டு போட்டிகளில் விளையாடியிருக்கிறார்கள்? அடுத்த தலைமுறை வீரர்களுக்கு உதவுவதற்காக, உள்நாட்டுப் போட்டிகளில் ஒரு குறிப்பிட்ட அளவில், இந்திய முன்னணி வீரர்கள் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
சஞ்சு சாம்சனை பற்றி மட்டுமே பேசி குறை சொல்லிக் கொண்டு இருக்கக் கூடாது. நாம் இந்திய அணியை பற்றி பேசுகிறோம். அவர் சிறந்த வீரர் மற்றும் அற்புதமான திறமை கொண்டவர் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவர் தன்னுடைய திறமையை இன்னும் நன்றாக பயன்படுத்தி எதிர்காலத்தில் விளையாட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்!