இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியின் கடைசி இன்னிங்ஸில் சதம் அடித்து அசத்திய விதம் குறித்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற சூழ்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தொடரை இழக்காமல் இருக்க இந்த போட்டியை வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி 224 ரன்கள் எடுக்க, அதற்குப் பின்னர் முதல் இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து 247 ரன்கள் குவித்தது.
அதற்குப் பிறகு இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி 396 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் இழக்க, தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 118 ரன்கள் குவித்து சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இந்த சூழ்நிலையில் இந்த போட்டியில் தான் சிறப்பாக விளையாடுவதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா கூறிய வார்த்தைகளும் முக்கிய காரணமாக அமைந்ததாக சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ரோஹித் பாய் சொன்ன விஷயம்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நிச்சயமாக சொல்ல வேண்டுமானால் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்தது. குறிப்பாக பந்தின் அசைவு இந்த ஆடுகளத்தில் நன்றாகவே இருந்தது. நான் விளையாடிக் கொண்டிருந்தபோது போட்டியை பார்வையிட்ட ரோஹித் பாயை பார்த்தேன். அப்போது அவர் என்னிடம் ‘எதையும் யோசிக்காமல் தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருங்கள் இப்போது அதுதான் முக்கியம்’ என்று கூறினார்.
இதையும் படிங்க:374 ரன்.. சாதனை டார்கெட்.. வாஷிங்டனின் மாஸ் சம்பவம்.. இந்திய அணி தொடரை சமன் செய்யுமா?
இது எங்கள் கடைசி இன்னிங்ஸ் என்பதால் நான் தொடர்ந்து விளையாட மனதளவில் தயாராக இருந்தேன். இந்த போட்டியில் நான் தொடர்ந்து முன்னேறி முடிந்த வரை அதிக ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. முதல் இன்னிங்ஸ் விளையாடிய போது இந்த ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பது பற்றி ஆராய முடிவு செய்தேன். பந்து வீச்சாளர்களுக்கு எப்படி அழுத்தம் கொடுப்பது என்பது குறித்து அதில் கவனம் செலுத்தினேன். அவர்கள் எங்கு பந்து வீசுவார்கள் எங்கு ரன்கள் எடுக்க முடியும் என்பதில் கவனமாக இருந்தேன்” என்று கூறி இருக்கிறார்.






