இந்திய மற்றும் முன்னாள் தமிழக வீரர் WV.ராமன் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட்டில் வைபவ் சூரிய வன்சியை விளையாட வைக்க கூடாது என அதிரடியாக கருத்து தெரிவித்திருக்கிறார். இதற்கான காரணத்தையும் அவர் கூறியிருக்கிறார்.
தற்போது ஜிம்பாப்வே நாட்டில் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிராக ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.
வைபவ் சூர்யவம்சி முதன்முறையாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அதிரடி சதத்தை அடித்தார். இது ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் ஒரு இந்திய பேட்ஸ்மேன் குறைந்த பந்துகளில் அடித்த சதமாக பதிவானது. இதன் மூலம் அவருக்கு மிகப்பெரிய அளவில் உலகெங்கும் கவனம் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து இந்திய ஏ அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் இந்திய ஏ அணிக்காகவும் சதங்களை அடித்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவரது திறமை மேம்பட்ட கிரிக்கெட் விளையாடுவதற்கு மாறி இருக்கிறது. தரமான அனுபவம் கொண்ட வீரர்களுடன் மோதும் அளவுக்கு அவரது பேட்டிங் திறமை இருக்கிறது. இந்த நிலையில் அவர் இந்திய அண்டர் 19 அணியிலும் இடம் பெற்று வருகிறார்.
தற்போது சிறந்த பவுலர்களை எதிர்கொண்டு விளையாடும் அளவுக்கு மாறி இருக்கும் வைபவ் சூரியவன்சி மீண்டும் அனுபவம் திறமையும் குறைவான 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட்டில் விளையாடுவது சரியாக இருக்காது என WV. ராமன் கருதுகிறார்.
இதையும் படிங்க : ரோகித் கோலி இல்லை.. டிராவிட்டுக்கு பிறகு நான் பார்த்த சுயநலமில்லாத இந்திய வீரர் இவர்தான் – முகமது கைஃப் பாராட்டு
இது குறித்து அவர் கூறும் பொழுது “நான் சொல்லப்போவது பலருக்கும் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்தாக இருக்கலாம். வைபவ் சூர்யவன்சி ஐபிஎல் தொடரிலும் இந்திய ஏ அணிக்காகவும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அவரை தற்போது அண்டர் 19 அணியில் விளையாட வைப்பது அவரின் வளர்ச்சிக்கு பாதகமாக அமையலாம். நம்முடைய கவனம் எப்பொழுதும் மேம்பட்ட வகையில் பெரியதாக தான் இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.