உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலிய அணி தற்போது தடுமாறி வருகிறது. இரண்டாவது இன்னிங்ஸில் 100 ரன்களில் ஆட்டம் இழந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட தென்னாப்பிரிக்க அணி தற்போது வெற்றியின் அருகே வந்து கொண்டிருக்கிறது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 212 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா 138 ரன்களில் சுருண்டது. இதனை அடுத்து 74 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்க்ஸில் பேட்டிங்கில் கடுமையாக தடுமாறியது. 73 ரன்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா அணி தோல்வியின் விளிம்பில் இருந்தது. எனினும் இறுதியில் ஸ்டார்க் அபாரமாக விளையாடி 58 ரன்கள் எடுக்க அலெக்ஸ் கெரி 43 ரன்கள் சேர்த்தார்.
வெற்றி அருகே தென்னாப்பிரிக்கா:
இதனால் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 207 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி விளையாடியது. தொடக்கவீரர் ரியாண் ரிக்கல்டன் மூன்றாவது ஓவரில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதனால் தென்னாப்பிரிக்காவின் சரிவு தொடங்கிவிட்டது என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மார்க்கரம் அபாரமாக விளையாடி ஆஸ்திரேலியா கனவில் மண்ணை அள்ளிப் போட்டார்.
ஸ்டார்க் பேட் கம்மின்ஸ் என ஆஸ்திரேலிய வீரர்கள் விக்கெட் வேட்டைக்கு தயாரான நிலையில் மார்க்கரம் அவர்களுடைய பந்துவீச்சை சுளுக்கு எடுத்தார். இதனால் ஆஸ்திரேலியா வீரர்கள் செய்வது அறியாமல் தவித்தனர். ஒரு கட்டத்தில் வியான் முல்டர் 27 ரன்களில் ஆட்டம் இழக்க, தென்னாபிரிக்க அணி கேப்டன் பவுமா களத்திற்கு வந்து பட்டையை கிளப்பினார்.
மார்க்கரம் அபார சதம்:
கொஞ்சமும் அசராத அவர் அரை சதம் கடந்தார். ஒரு கட்டத்தில் சிறப்பாக விளையாடிய மார்க்கரம் சதம் விளாசினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்திருக்கும் எட்டாவது சதம் இதுவாகும். இதன் காரணமாக மூன்றாவது நாள் ஆட்ட நேரம் முடிவில் தென் ஆப்ரிக்க அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்திருக்கிறது.
இதையும் படிங்க: 20 கி.மீ ஓடுங்கள் ரோகித் என்றேன்.. கோலி, ரோகித் 5 ஆண்டு டெஸ்ட்டில் விளையாடிருக்கனும்.. யோக்ராஜ் கருத்து
தற்போது இன்னும் இரண்டு நாள் ஆட்டம் எஞ்சி இருக்கிறது. தென்னாபிரிக்காவின் வெற்றிக்கு 69 ரன்கள் தேவைப்படுகிறது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற இன்னும் எட்டு விக்கெட்டுகள் தேவை. இதனால் தென்னாபிரிக்காவின் வெற்றி பிரகாசமாக இருப்பதால், அந்த அணி முதல் முறையாக உலக கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.






