WPL பைனல்.. முடிந்தது 16 வருட சோகம்.. ஆர்சிபி டெல்லியை வீழ்த்தி சாம்பியன்.. முதல் பட்டம் வந்தது

0
154
WPL

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் பெண்களுக்கான டி20 லீக் டபிள்யுபிஎல் தொடரின் இரண்டாவது சீசன் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இன்று இந்த தொடரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது.

இன்றைய பெரிய இறுதிப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு துவக்க வீராங்கனைகளிடமிருந்து மிகப்பெரிய ரன் பங்களிப்பு பவர் பிளேவில் வந்தது. அந்த அணியின் துவக்க வீராங்கனை ஷபாலி வர்மா 27 பந்தில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 44 ரன்கள் எடுத்தார். இன்னொரு துவக்க வீராங்கனை கேப்டன் மெக் லானிங் 23 பந்தில் 23 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

பவர் பிளே முடியும் வரை மிகவும் வலிமையாக இருந்த டெல்லி கேப்பிடல்ஸ் ஏழாவது ஓவரின் முதல் பந்தில் செபாலி வர்மா, மூன்றாவது பந்தில் ஜெமிமா ரோட்டரிகியூஸ், நான்காவது பந்தில் அலைஸ் கேப்சி என முக்கிய விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. இந்த ஓவரை இடது கை சுழற் பந்துவீச்சு வீராங்கனை மோலினக்ஸ் வீசினார்.

இந்தச் சரிவில் சிக்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் அதற்குப் பிறகு மீளவே முடியவில்லை. இறுதியாக அந்த அணி 18.3 ஓவரில் 113 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தரப்பில் பந்துவீச்சில் ஸ்ரேயங்கா படேல் 3.3 ஓவர்களில் 12 ரன்கள் தந்து 4 விக்கெட், மோலினக்ஸ் 4 ஓவர்களுக்கு 20 ரன்கள் தந்து 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதற்குப் பிறகு இலக்கை நோக்கி விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு துவக்க வீராங்கனைகள் சோபி டிவைன் 27 பந்தில் 32 ரன், கேப்டன் ஸ்மிருதி மந்தனா 39 பந்தில் 32 ரன்கள் எடுத்தார்கள். ஆனாலும் குறைந்த இலக்குக்கு எல்லோரும் பொறுமையாக விளையாடியதால் ஆட்டம் கடைசி வரை நீண்டது.

கடைசி ஓவரில் 5 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட பொழுது முதல் இரண்டு பந்துகளில் 2 ரன்கள் எடுத்த ஆர்சிபி அணிக்கு மூன்றாவது பந்தில் ரிச்சா கோஸ் அபாரமாக பவுண்டரி அடிக்க, ஆர்சிபி அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இரண்டாவது டபிள்யூ சீசனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடைசி வரை களத்தில் நின்ற எல்லீஸ் பெரி 36 பந்தில் 34 ரன், ரிச்சா கோஸ் 13 பந்தில் 13 ரன் எடுத்தார்கள்.

16 ஆண்டுகளாக டி20 லீக்கில் விளையாடி வரும் ஆர்சிபி அணிக்கு, 17ஆவது ஆண்டில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெண்கள் கிரிக்கெட் அணி முதல் டி20 லீக் கோப்பையை வென்று கொடுத்து அசத்தியிருக்கிறது. இதிலிருந்து அவர்களது துரதிஷ்டம் மாறுமா? என்று பார்க்க வேண்டும்.

- Advertisement -