இங்கிலாந்து அணி தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் மூன்று பொட்டுகள் கொண்ட ஒருநாள் தொடரை ஒன்றுக்கு இரண்டு என இழந்தது.
இந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் வெற்றி பெற்று இருந்த நிலையில், நேற்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸில் வெற்றி பெற்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் பிரண்டன் கிங் ஒரு முனையில் நிலைத்து நிற்க கையில் மேயர்ஸ் 17, நிக்கோலஸ் பூரன் 5, ஷாய் ஹோப் 1, சிம்ரன் ஹெட்மையர் 2 என வரிசையாக வெளியேறினார்கள்.
இதற்கு அடுத்து கிங் மற்றும் ரோமன் பவல் இருவரும் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் அணியை மீட்டு எடுக்க ஆரம்பித்தார்கள். ரோமன் பவல் அதிரடியாக 28 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர் உடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
அடுத்து வந்த ரசல் 10 பந்துகளில் 14 ரன்கள், ஜேசன் ஹோல்டர் 0 என ஆட்டமிழக்க, நிலைத்து நின்ற துவக்க ஆட்டக்காரர் பிரண்டன் கிங் 52 பந்துகளில் எட்டு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர் உடன் 82 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஆதில் ரசீத் மற்றும் மில்ஸ் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் 25, ஜோஸ் பட்லர் 5, வில் ஜேக்ஸ் 24, ஷாம் கரன் 50, லிவிங்ஸ்டன் 17, ஹாரி ப்ரூக் 5, மொய்ன் அலி 22, கிரீஸ் வோக்ஸ் 2, ரேகான் அஹமத் 10 என ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில், இங்கிலாந்து அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என வலிமையாக முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் நான்கு விக்கெட் கைவசம் இருக்க, வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை வீசிய ஜேசன் ஹோல்டர் மூன்று ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து, ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். இதன் காரணமாக கடைசி ஓவருக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரே வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப் 3, அகேல் உசைன் 2 விக்கட்டுகள் கைப்பற்றினார்கள்.