காற்றில் பறந்த பென் ஸ்டோக்ஸ்; ஆஸிக்கு எதிராக தொடரை வென்றது இங்கிலாந்து – வீடியோ இணைப்பு!

0
295
Ben Stokes

ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக, ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இருந்தது.

தொடரின் இரண்டாவது போட்டி இன்று கான்பெரா மைதானத்தில் துவங்கியது. கடந்த போட்டியில் கம்மின்ஸ், ஹேசில்வுட், ஸ்டார்க் ஆகிய மூன்று முக்கிய பந்துவீச்சாளர்களையும் ஆஸி அணி ஆட வைக்கவில்லை. இந்தப்போட்டியில் தோற்றால் தொடரை இழக்க வேண்டிவரும் என்பதால், மூன்று முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் இடம் பெற்றார்கள் . இந்த போட்டிக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

- Advertisement -

கடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பட்லர் மற்றும் ஹேலஸ் இருவரும் அரைசதம் அடித்திருக்க, இந்த ஆட்டத்தில் சீக்கிரத்தில் வெளியேறினார்கள். மேலும் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஹாரி புரோக்ஸ் ஆகியோர் ஏமாற்ற, மூன்றாவது வீரராக களமிறங்கிய டேவிட் மலான் மற்றும் ஆறாவது வீரராக வந்த மொயின் அலி இருவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். டேவிட் மலான் 49 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்களுடன் 82 ரன்கள் எடுத்தார். மொயின் அலி 27 பந்தில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சருடன் 44 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் வார்னர் மற்றும் பின்ச் இருவரும் ஏமாற்றினார்கள். அடுத்து வந்த மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டாய்னிஸ் இருவரும் சீக்கிரத்தில் வெளியேறினார்கள். ஒருமுனையில் மிச்செல் மார்ஸ் 29 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். இளம் வீரர் டிம் டேவிட் 23 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க ஆஸ்திரேலிய அணியின் வெற்றி கேள்விக்குறியானது. இறுதியில் 6 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணியால் 170 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை 2-0 எனக் கைப்பற்றியது!

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியினரின் வெளிவட்ட பீல்டிங் மிகச் சிறப்பாக இருந்தது. கிடைத்த கேட்ச் வாய்ப்புகளை அருமையாக பிடித்தார்கள். மேலும் இந்த ஆட்டத்தில் ஒரு இடத்தில் மிச்செல் மார்ஸ் தூக்கி அடித்த பந்தை, பென் ஸ்டோக்ஸ் பாய்ந்து வந்து கேட்ச் செய்துவிட்டார். ஆனால் வேகத்தால் நிலைதடுமாறி பவுண்டரி லைனை தாண்ட வேண்டியிருந்ததால், பந்தை லாவகமாக வெளியே வீசிவிட்டு, மீண்டும் வந்து பந்தை திருப்பி எடுத்து கீப்பருக்கு அடித்து 4 ரன்களை மிச்சம் செய்தார். இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வென்றது வெறும் 8 ரன்கள் வித்தியாசத்தில்தான் எனும்போது இவர் தடுத்த இந்த 4 ரன்கள் மிக முக்கியமானது என்பது புரியும். இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

- Advertisement -