இந்திய அணி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பந்துவீச்சில் ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மேலும் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி பிளேயிங் லெவனில் இடம்பெற்ற கடைசி மூன்று போட்டிகளில் இந்திய அணியின் பவுலிங் யூனிட் பெரிய பலம் மிக்கதாக மாறி இருக்கிறது.
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ஐந்து பந்துவீச்சாளர்களும் விக்கெட்டை கைப்பற்ற கூடிய திறன் படைத்தவர்கள். எனவே இவர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் பந்து வீச வந்து கொண்டே இருக்கின்ற காரணத்தினால், எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு ரிலாக்ஸ் செய்ய நேரமே இருப்பதில்லை.
கேப்டன் ரோஹித் சர்மா நேரத்திற்கு தகுந்தார் போல் சரியான பந்துவீச்சாளர்களைக் கொண்டு தொடர்ந்து விக்கெட்டை கைப்பற்ற தாக்குதல் பாணியில் பந்துவீச்சை அமைத்துக் கொண்டே இருக்கிறார்.
குறிப்பாக கடைசியாக இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணியை 55 ரன்களுக்கு இந்திய அணி சுருட்டியது. இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் மொத்தமாக ஒன்பது விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். முகமது சமி ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.
இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஹசன் ராஸா பேசியிருந்த பொழுது “ஐசிசி கட்டாயப்படுத்தி பிசிசிஐ அவர்களுக்கு தேவையான ஸ்பெஷல் பந்துகளை வாங்குகிறது. இதனால்தான் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பந்து நன்றாக ஸ்விங் ஆகிறது. இதுகுறித்து கட்டாயம் விசாரணை நடத்தப்பட வேண்டும்!” என்பதாக பேசியிருந்தார்!
இதற்கு இந்தியா தாண்டி பாகிஸ்தானில் இருந்தும் பெரிய விமர்சனங்கள் என ஆரம்பித்திருக்கிறது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் இது குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்திய அணி நன்றாக செயல்படுகின்ற காரணத்தினால்தான் வெல்கிறது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் லெஜென்ட் வேகப்பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் கூறும் பொழுது “கடந்த இரண்டு நாட்களாக நான் இது பற்றி படித்து வருகிறேன். இது சிந்தனையே இல்லாமல் பேசப்பட்டது. இப்படிப் பேசி சம்பந்தப்பட்டவர் தன்னை சங்கடப்படுத்திக் கொள்வதோடு, பாகிஸ்தானை உலகத்திற்கு முன்னால் அவமானப்படுத்துகிறார்!” என்று மிகக் கடுமையாக கூறியிருக்கிறார்!
இன்று பாகிஸ்தான் அணி வாழ்வா? சாவா? போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக உலகக் கோப்பை தொடரில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் தோற்றால் அரையிறுதி வாய்ப்பில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது!






