நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கு சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்படுமா? என்பது குறித்து எதிர்பார்ப்பு கொல்கத்தா வெற்றியால் எழுந்திருக்கிறது.
நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஆடுகளம் மெதுவாகவும் அதே சமயத்தில் பந்து திரும்பும் படியும் இருந்தது. ஆனால் வழக்கமாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் இப்படி இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடுகளத்தால் ஏற்பட்ட சர்ச்சை
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தங்களிடம் இருக்கும் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளம் வேண்டும் என ரகானே பேட்டியில் தெரிவிக்க, அதற்கு அந்த மைதானத்தின் ஆடுகள அமைப்பாளர் சுஜன் முகர்ஜி மறுப்பு தெரிவிக்க பிரச்சனை மிகவும் பெரிதாக மாறியது. பின்பு திரை மறைவில் சமரசம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஆடுகளம் சுழல் பந்துவீச்சு சாதகமாக அமைந்தது. இந்த ஆடுகளத்தை கணிக்க முடியாத காரணத்தினால் வெறும் 120 ரன்கள் மட்டும் எடுத்து ஐதராபாத் அணி சுருண்டு 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. கொல்கத்தா ரகானே கோரிக்கைக்கு பலன் கிடைத்திருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.
சிஎஸ்கே பிளம்மிங் புலம்பல்
கடைசியாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்த பிறகு அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் பேசும்பொழுது, தங்களுக்கு சில ஆண்டுகளாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஹோம் அட்வாண்டேஜ் இல்லை எனவும், ஆடுகளம் எப்படி இருக்கிறது என்று கணிக்க முடியவில்லை எனவும் மிகவும் வருத்தத்துடன் கூறியிருந்தார்.
இதையும் படிங்க : ஹெட் அபிஷேக் ரன் எடுக்க முடியாததுக்கு காரணம்.. எல்லா டீமும் இந்த பிளான் வெச்சிருக்கு – முகமது கைஃப் பேச்சு
இந்த நிலையில் கொல்கத்தா கேப்டன் ரகானே இதே போல கருத்து தெரிவிக்க அவர்களுக்கு சாதகமாக ஆடுகளம் நேற்று கிடைத்தது. இதேபோல் சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் கூறி இருக்கின்ற காரணத்தினால் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சுழல் பந்துவீச்சு சாதகமான ஆடுகளம் கிடைக்குமா? என்கின்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் கிடைக்கும் என்றால் சிஎஸ்கே அணியின் வெற்றி சதவீதம் பெரிய அளவில் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!






