விராட் கோலி போல்ட் ஆன பந்துக்கு ஏன் ரன் தரப்பட்டது? நோ-பால் ஏன் கொடுக்கப்பட்டது? ஐசிசி விதிகள் விளக்கம்!

0
89520
Viratkohli

இன்று டி20 உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் மோதிய போட்டியில் ஏற்பட்ட திருப்பங்கள், 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஏற்பட்ட திருப்பங்களை விட அதிக திருப்பங்களைக் கொண்டு ரசிகர்களின் இதயத்துடிப்பை பலமடங்கு எதைச் செய்வதாக இருந்தது.

இந்த ஆட்டத்தில் விராட்கோலி களத்தில் இருக்க, கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. இந்த ஓவரை பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ் வீசினார்.

- Advertisement -

கடைசி ஓவரின் முதல் பந்தை சந்தித்த ஹர்திக் பாண்டியா கேப்டன் பாபர் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் தினேஷ் கார்த்திக் மூலம் ஒரு ரன் வந்தது. மூன்றாவது பந்தில் விராட் கோலி 2 ரன்கள் எடுத்தார். நான்காவது பந்து நோ பாலாக வீசப்பட அதில் கிங் கோலி சிக்சர் அடித்தார். இதற்கு பிரிஹிட் பால் வீசப்பட்டது. இந்தப் பந்தில் விராட்கோலி கிளீன் போல்ட் ஆக, பந்து ஸ்டெம்பில் பட்டு கீப்பருக்கு பின்னால் போனது. இந்த நேரத்தில் விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் மூன்று ரன்களை ஓடி எடுத்தனர். இதனால் இரண்டு பந்துகளுக்கு இரண்டு ரன்கள் வேண்டும் என்ற நிலை வந்து, பின்பு தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்து, ஒரு பந்துக்கு இரண்டு ரன் என்று மாறி, பிறகு ஒரு அகலப் பந்து வீசப்பட்டு, இறுதிப் பந்தில் ஒரு ரன் வர இந்தியா வெற்றி பெற்றது.

தற்பொழுது வீசப்பட்டது நோ பாலா என்று ஒரு சர்ச்சை இருக்கிறது. அதற்கான புகைப்படத்தைப் பார்த்தாலே தெரியும் அது நோபால் என்று. பந்தை அடித்துவிட்டு விராட்கோலி நோ பால் கேட்டதால் நோபால் கொடுக்கப்படவில்லை. பந்து பவுண்டரி இல்லை சிக்ஸரா என்று பார்த்த பின்பு இரண்டாவது நடுவர் நோ பால் கொடுத்தார்.

அடுத்து கிளீன் போல்ட் ஆன பந்தில் ரன் தரக்கூடாது என்று ஒரு விவாதம் எழுந்தது. ஆனால் ஐசிசி விதியின்படி ஒரு பிரிஹிட் பந்தில் பந்தை கையால் தொடுவது, களத்தில் பீல்டரை தடுப்பது, ரன்அவுட், பந்தை இரண்டு முறை பேட்டால் அடிப்பது இப்படி நான்கு முறைகளில் ஒரு பேட்ஸ்மேன் ஆட்டம் இழப்பார்.

- Advertisement -

மற்ற எந்த முறையில் அவர் ஆட்டம் இழந்தாலும் அது அவுட் என்று அறிவிக்கப்படாது. ஒரு பிரீஹிட் பந்து வீசி முடிக்கப்பட்டு கீப்பர் அல்லது பந்துவீச்சாளர் இடம் வரும்பொழுது அந்தப் பந்து டெட் ஆகிவிடும். அல்லது பவுண்டரி இல்லை சிக்சர் அடிக்கும் பொழுது டெட் ஆகும். அடுத்து மேலே சொல்லப்பட்டுள்ள நான்கு முறைகளில் ஒரு முறையில் பிரீ ஹிட்டில் ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழந்தால் அத்தோடு பந்து டெட் ஆகும். இவை அல்லாமல் கேட்ச், போல்ட் ஹிட், விக்கெட் என்று என்ன நடந்தாலும் பேட்ஸ்மேன் ரன் எடுக்கலாம். 20.1.1, 20.1.1.1, 2.1.1.2, 2.1.1.3 இந்த ஐசிசி விதியின் பிரிவுகள் இதைத்தான் கூறுகிறது.

இந்த விதிகளின் படிதான் விராட் கோலி நவாஸ் வீசிய பிரீ ஹிட் பந்தில் போல்ட் ஆன பொழுதும், பந்து டெட் ஆகாத காரணத்தால் 3 ரன்கள் ஓடி எடுக்கப்பட்டது. இதில் நடுவர்கள் எந்தவிதமான தன்னிச்சையான முடிவையும் எடுக்கவில்லை. ஐசிசி சட்டப் புத்தகத்தில் என்ன கூறப்பட்டு இருக்கிறதோ அதன்படியே முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.