“2022 ரகானே தன்னை மைதானத்திலிருந்து வெளியேற்றியது ஏன்? என் அம்மா சகோதரியை தவறாக பேசினால் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” – மனம் திறந்த ஜெய்ஸ்வால்!

0
940
Jaiswal

இந்திய உள்நாட்டு தொடர்களிலும் மேலும் இந்த வருட ஐபிஎல் தொடரிலும் மிகச் சிறப்பாக செயல்பட்ட இளம் இடதுகை துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியில் முதல்முறையாக இடம் பெற்றார்!

இவர் கடந்த ஆண்டு கோவை மைதானத்தில் நடத்தப்பட்ட துலிப் டிராபி இறுதிப்போட்டியில் மேற்கு மண்டல அணிக்காக தெற்கு மண்டல அணியை எதிர்த்து விளையாடினார்.

- Advertisement -

அந்தப் போட்டியில் இவர் முதல் இன்னிங்சில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகிவிட்டார். ஆனால் திரும்பி வந்து இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக 323 பந்துகளில் 30 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 265 ரன்கள் எடுத்து மொத்தமாக தெற்கு மண்டலத்தை நசுக்கி விட்டார். இந்தப் போட்டியில் மேற்கு மண்டலம் 294 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் மேற்கு மண்டலத்தின் இரண்டாவது இன்னிங்ஸின் போது அந்த அணியின் வீரர் ரவி தேஜாவை ஜெய்ஸ்வால் தொடர்ந்து ஏதோ சொல்ல அது களத்தில் பெரிய பிரச்சினையாகி விட்டது. அப்பொழுது மேற்கு மண்டல அணியின் கேப்டனான ரகானே ஜெய்ஸ்வாலை சில ஓவர்களுக்கு மைதானத்தை விட்டு ஒழுங்கீனச் செயலுக்காக அனுப்பிவிட்டார்.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இளம் வீரர் ஜெயஸ்வால் “நான் மனதளவில் ஆக்ரோஷமாக இருக்கிறேன். அது சில நேரங்களில் வெளிப்பட்டு விடுகிறது என்று நான் நினைக்கிறேன். நான் அந்தச் சம்பவத்தின் போது பெரிதாக எதையும் கூறிவிடவில்லை. ஆனால் பரவாயில்லை. இப்பொழுது அது குறித்து பேசுவதால் எந்தப் பயனும் கிடையாது.

- Advertisement -

விராட் கோலி மாதிரியான ஒரு பெரிய வீரரை என்னால் ஸ்லெட்ஜ் செய்ய முடியுமா என்று கேட்டால், நான் அது குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் அதற்கு பதிலாக அவரிடம் இருந்து அவர் காட்டும் ஆக்ரோஷத்தை உறிஞ்சிக் கொள்வேன்.

சீனியர்கள் ஸ்லெட்ஜிங் செய்ய மாட்டார்கள் என்று யார் சொன்னது? இது அனைவருக்கும் நடக்கும். இது யாருக்கும் வெளியில் தெரியாது அவ்வளவுதான். மேலும் இது யார் என்ன சொல்கிறார்கள் என்பதை பொறுத்து அமைகிறது. என் அம்மா அல்லது என் சகோதரி பற்றி யாராவது களத்தில் தவறாக சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது!” என்று கூறி இருக்கிறார்!

இந்திய அணியில் சில காலமாக இடதுகை பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் இல்லாதது ஒரு பெரிய குறையாகவே இருந்து வந்தது. தற்பொழுது இடது கை வீரரான இவர் அணியில் இடம் பெற்று இருப்பது இவர் மீதான எதிர்பார்ப்பை அதிகம் உருவாக்கி இருக்கிறது. இவர் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு விளையாடினால் குறைந்தது இந்திய அணிக்கு பத்து வருடமாவது விளையாடுவார்!