நடப்பு சாம்பியன் இங்கிலாந்து நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறுவது ஏறக்குறைய உறுதியான நிலைக்கு வந்திருக்கிறது.
உலகக்கோப்பையின் துவக்க போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்து, அதற்கு அடுத்து பங்களாதேஷ் அணிக்கு எதிராக வெற்றி பெற்று, தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தான், சவுத் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை என மூன்று தோல்விகளை சந்தித்து, இங்கிலாந்து ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளை தோற்று இருக்கிறது.
குறைந்தபட்சம் 9 லீக் போட்டிகளில் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றால்தான் அரையிறுதிக்கான இடம் பெரும்பாலும் உறுதியாகும். சில அரிதான நேரத்தில் ஐந்து வெற்றிகள் கூட அரை இறுதிக்கு அழைத்துச் செல்லும். ஆனால் அப்படியான நிலை வருவது மிகவும் கடினமான ஒன்று.
இந்த நிலையில் இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்க, அடுத்து கைவசம் நான்கு போட்டிகள் இருக்கிறது. இந்த நான்கு போட்டிகளில் வென்றாலும் மொத்தம் ஐந்து போட்டிகளில்தான் வெற்றி கிடைக்கும்.
இப்படி ஐந்து போட்டிகளில் வெற்றி உடன் இங்கிலாந்து அரையிறுதிக்கு வர வேண்டும் என்றால், நெதர்லாந்து தவிர மற்ற எல்லா அணிகளுமே இங்கிலாந்துக்கு உதவி செய்யக்கூடிய வகையில் விளையாட வேண்டும். அப்படி என்றால் இது நடக்கின்ற காரியமா? மேற்கொண்டு இங்கிலாந்து அரையிறுதிக்கு வர என்ன நடக்க வேண்டும்? என்று பார்ப்போம்.
முதலில் இங்கிலாந்து தான் விளையாட இருக்கும் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
ஐந்து போட்டிகளில் தலா இரண்டு வெற்றிகளை பெற்றுள்ள இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள், தாங்கள் விளையாட இருக்கும் போட்டிகளில் குறைந்தபட்சம் ஒரு போட்டியை தோற்க வேண்டும்.
ஐந்து போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றிகளை பெற்றுள்ள ஆஸ்திரேலியா, தான் விளையாட இருக்கும் நான்கு போட்டிகளில் இரண்டு போட்டிகளை தோற்க வேண்டும்.
ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளை வென்றுள்ள சவுத் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள், தாங்கள் விளையாட இருக்கும் நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளை தோற்க வேண்டும்.
விளையாடிய ஐந்து போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா, தான் அடுத்து விளையாட இருக்கும் நான்கு போட்டிகளிலும் தோல்வி அடைய வேண்டும்!






