ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய குஜராத் அணி சாய் சுதர்சனின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை விளாசி இருக்கிறது.
சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 41 பந்துகளில் 2 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 63 ரன்களை விளாசினார். அதேபோல் பட்லர் 39 ரன்களையும், சுப்மன் கில் 38 ரன்களையும் விளாசினர். மும்பை அணி தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், போல்ட் மற்றும் சஹர், முஜூப் உர் ரஹ்மான், சத்யநாராயண ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
ஹர்திக் பாண்டியா செய்த தவறு
இந்த ஆட்டத்தில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மோசமான தவறுகளை ஆட்டத்தில் செய்திருக்கிறார். இந்த ஆட்டத்தில் 4வது வெளிநாட்டு வீரராக முஜீப் உர் ரஹ்மான் சேர்க்கப்பட்டிருந்தார். இதனால் சான்ட்னர் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் முழுமையாக பயன்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முஜீப் உர் ரஹ்மான் வெறும் 2 ஓவர்கள் மட்டுமே வீச அழைக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல் சான்ட்னர்-க்கு வெறும் 3 ஓவர்களை மட்டுமே பவுலிங் கொடுத்துள்ளார் ஹர்திக் பாண்டியா. 3 ஓவர்களை வீசிய சான்ட்னர் 25 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். அவருக்கு 4வது ஓவர் கொடுத்திருந்தால், கடைசியில் பவுலிங் செய்த சத்யநாராயண ராஜூவுக்கு அதிக அழுத்தம் இருந்திருக்காது.
விக்னேஷ் புத்தூர் எங்கே?
அதேபோல் முஜீப் உர் ரஹ்மான் 2 ஓவர்கள்தான் வீசுவார் என்றால், அவருக்கு பதிலாக வில் ஜாக்ஸை பிளேயிங் லெவனில் கொண்டு வந்திருக்கலாம். அவர் இருந்திருந்தால் 2 ஓவர்களை வீசுவதோடு, பேட்டிங்கிலும் சிறந்த பங்களிப்பை அளித்திருந்தார். கடந்த ஆண்டு குஜராத் அணிக்கு எதிராக ஆர்சிபி அணிக்காக களமிறங்கிய போது ரஷீத் கானையே பொளந்து கட்டி சதம் அடித்திருந்தார்.
ஆனால் அவரை மும்பை அணி சேர்க்கவில்லை. அதேபோல் சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக பவுலிங் செய்த விக்னேஷ் புத்தூர் சேர்க்கப்படவில்லை. அவரை சேர்த்திருந்தால் கூட எளிதாக 2 ஓவர்களை வீசி இருந்தால் கூட வில் ஜாக்ஸ் சேர்க்கப்பட்டிருக்க முடியும். இதனால் மும்பை அணி பிளேயிங் லெவனிலேயே தவறு செய்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.






