இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் இரண்டாவது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் துவக்க ஆட்டக்காரர் ஜான் கேம்பல் சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார்.
தற்போது டெல்லி மைதானத்தில் கடைசி மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 518 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்கள் எடுத்து ஃபாலோ ஆன் ஆனது.
பதிலடி கொடுத்த வெஸ்ட் இண்டீஸ்
இந்த தொடரில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 80 ஓவர்கள் தாண்டி விளையாடியது. இதன் காரணமாக இந்திய பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுக்கும் விதமாக இந்திய அணி பேட்டிங் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கம்பீர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஃபாலோ ஆன் கொடுத்து தொடர்ந்து இந்திய அணியை பந்து வீச வைத்தார்.
இந்த முறை வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்தது. மிகக் குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஆட்டக்காரர் ஜான் கேம்பல் மற்றும் அனுபவ வீரர் ஷாய் ஹோப் இருவரும் நேற்று மூன்றாம் நாள் முடிவில் அரை சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார்கள்.
23 ஆண்டுகள் சாதனை
இதைத்தொடர்ந்து இன்று விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிந்து ஜான் கேம்பல் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 199 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 115 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு முனையில் சதத்தை நோக்கி ஷாய் ஹோப் விளையாடி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது மூன்று விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்திருக்கிறது. மேலும் 58 ரன்கள் மட்டுமே பின் தங்கி இருக்கிறது.
இதையும் படிங்க : எப்படி அந்த மனுஷன் இப்படி ஆடுறார்ன்னு தெரியல.. எனக்கே ரொம்ப வியப்பா இருக்கு – இந்திய முன்னாள் கோச்
இன்று ஜான் கேம்பல் அடித்த சதம் துவண்டு கிடக்கும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு உற்சாகம் அளிப்பதாக இருக்கிறது. மேலும் இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஆட்டக்காரர் ஒருவர் 23 ஆண்டுகள் கழித்து அடித்த சதமாக இது பதிவாகி இருக்கிறது.






