சமீப காலத்தில் ஆசிய கண்டத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் எழுச்சி என்பது மிகவும்அற்புதமான வகையில் அமைந்திருக்கிறது. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவர்கள் யாருக்கும் சவால் கொடுக்க முடியும் அணியாக உயர்ந்திருக்கிறார்கள்.
நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் ஆக வந்த இங்கிலாந்து அணி ஒருபுறம் படுமோசமாக விளையாடிக் கொண்டிருக்க, அதற்கு நேர் எதிராக மிகச் சிறப்பாக ஆப்கானிஸ்தான் விளையாடியது. மேலும் இங்கிலாந்தையும் பாகிஸ்தானையும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தோற்கடித்தது. ஆஸ்திரேலியாவை தோற்கடிக்கும் வாய்ப்பில் இருந்து கடைசி நேரத்தில் இழந்தது.
ஆப்கானிஸ்தான் நல்ல கிரிக்கெட் விளையாடி வளர்ந்து வந்தாலும் அவர்களுக்கு போதிய போட்டிகள் ஐசிசியால் வழங்கப்படவில்லை. வளரும் அணிக்கு மிக முக்கிய தேவை அட்டவணை. அவர்களுக்கு போட்டிகள் இல்லாத காரணத்தினால் ஒரு அணியாக இணைந்து கற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பங்கள் வாய்க்காமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் வாய்ப்பை கொடுத்திருக்கிறது. இந்த இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் தனிப்பட்ட முதல் வெள்ளைப் பந்து தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் காலங்களில் ஆப்கானிஸ்தான் அணி வெளியில் நிறைய தொடர்களில் விளையாட இது முக்கிய துவக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது. ஆனாலும் அவர்களது செயல்பாடு என்பது எதிர்பார்த்தது போல் சிறப்பாகவே இருந்தது. கடினமான நேரத்தில் 158 ரன்கள் அவர்கள் சேர்த்தது பாராட்டுக்குரிய விஷயம்.
இந்தத் தொடர் குறித்து ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜோனதன் டிராட் “இந்த இருதரப்பு தொடர் எங்களது முன்னேற்ற பாதையில் ஒரு நல்ல படிக்கட்டாக அமைந்திருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் இனி உலகம் முழுக்க இப்படியான தொடர்களில் நாங்கள் பங்கேற்று விளையாட விரும்புகிறோம்.
நாங்கள் ஒரு அணியாக எவ்வளவு கிரிக்கெட் சேர்ந்து விளையாடுகிறோமோ அது எங்களுக்கு நல்லது. வீரர்கள் நிறைய விஷயங்கள் இதன் மூலம் கற்றுக் கொள்வார்கள். தற்பொழுது அவர்களுக்கு உலகம் முழுவதும் நடக்கும் பிரான்சிஸைஸ் டி20 லீக்குகளின் அனுபவம்தான் அதிகம் இருக்கிறது. மேலும் அவர்கள் பல அணிகளுக்காக தனித்தனியாக விளையாடுகிறார்கள். நாங்கள் வரும் காலங்களில் ஒரே அணியாக சேர்ந்து நிறைய நாடுகளுக்கு எதிராக விளையாடுவோம் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்!