அடுத்து நாங்கள் கையில் எடுக்க வேண்டியது ஈரமான பந்து மட்டுமே – தோல்வி குறித்து சென்னை கேப்டன் ஜடேஜா பேச்சு

0
128
Ravindra Jadeja CSK Captain

ஐ.பி.எல் போட்டியின் ஆறாவது நாள் நேற்று புதிய கேப்டன் ஜடேஜாவின் சென்னை அணியும், புதிய அணியான கே.எல்.ராகுல் கேப்டனாக இருக்கும் லக்னோ அணியும், மும்பையின் ப்ரோபோர்ன் மைதானத்தில் மோதின!

முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் பனிப்பொழிவை மனதில் வைத்து, பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னையின் அணியின் துவக்க ஆட்டக்காரர்களில் ருதுராஜ் உடனே பெவிலியன் திரும்ப, கான்வோக்குப் பதில் துவக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய ராபின் உத்தப்பா 27 பந்துகளில் 50 ரன்கள் என பின்னியெடுத்தார்.

- Advertisement -

சென்னை அணியின் முதல் ஆட்டத்தில் ஆடாத மொயீன் அலி 35 [22], சிவம் துபே 49 [30], அம்பதி 27 [20], ஜடேஜா 17 [9], தோனி 16* [6] என அடித்துக்கொடுக்க, இருபது ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை குவித்தது. சிறப்பாக பந்துவீசிய பிஷ்னோய் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அடுத்து கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கே.எல்.ராகுலும் டிகாக்கும் முதல் விக்கெட்டுக்கு பத்து ஓவர்களில் 99 ரன்களெடுத்து நல்ல துவக்கம் தந்தனர். கே.எல்.ராகுல் 40 [26] என்று ஆட்டமிழக்க, அடுத்து எவின் லீவிஸ் ஒருபுறம் மலைபோல் நம்பிக்கையாய் நின்று சென்னை அணியை அச்சுறுத்த ஆரம்பித்தார்.

இதற்கு இடையில் டிகாக் 61 [45], மனிஷ் பாண்டே 5 [6], தீபக் ஹூடா 13 [8], என்று ஆட்டமிழக்க்க, கடைசி இரண்டு ஓவர்களுக்க 34 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19வது ஓவரை சிவம் துபே வீச வந்தார், களத்தில் எவின் லீவிசும், இளம் வீரர் பதோனியும் இருந்தனர். அந்த ஓவரின் முதல் பந்தையே பதோனி அட்டகாசமாக சிக்ஸர் அடிக்க, அடுத்து எவின் லீவிஸ் அடித்துத் துவம்சம் செய்துவிட்டார். ஒரே ஓவரில் 25 ரன்கள் வர, அடுத்த ஓவரில் எளிதாய் வென்றது லக்னோ அணி. இறுதி ஆட்டமிழக்காமல் 23 பந்துகளில் 55 ரன்கள் குவித்த எவின் லீவிஸ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -

ஆட்டம் முடிந்ததும் தோல்வி குறித்துப் பேசிய சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா “நாங்கள் பேட்டிங்கில் நல்ல தொடக்கத்தைப் பெற்றோம். ராபின் உத்தப்பா, சிவம் துபேவின் ஆட்டம் அருமையாக இருந்தது. நல்ல தொடக்கத்தைப் பெற்ற நாங்கள், சில கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிட்டு விட்டோம். நிறைய பனிப்பொழிவு இருந்ததால், பந்து கைகளில் நிற்கவே இல்லை. நாங்கள் அடுத்து ஈரமான பந்துகளில் பயிற்சி செய்ய வேண்டும். முதல் ஆறு ஓவர்களிலும், மிடில் ஓவர்களிலும் சிறப்பாகச் செயல்பட்டோம். இந்த ஆடுகளம் பேட் செய்வதற்கு வசதியாக இருந்தது. பந்துவீச்சில் நாங்கள் எங்கள் திட்டங்களைக் களத்தில் செயல்படுத்த வேண்டும்” என்று கூறினார்!