இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மூன்றாவது போட்டி நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி வென்றிருந்த நிலையில், மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா வென்று இருக்கிறது. இதன் மூலம் ஆஸ்திரேலியா தொடரில் நீடிக்கிறது.
இன்று டாசில் வெற்றி பெற்று முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்த ஆஸ்திரேலியா அணி, 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணிக்கு 222 ரன்கள் கொடுத்தது.
இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்கார ருதுராஜ் மிகச் சிறப்பாக விளையாடி 57 பந்துகளில் 123 ரன்கள் குவித்தார். அவருக்கு இதுவே முதல் சர்வதேச டி20 சதமாகும். மேலும் டி20 கிரிக்கெட் வடிவத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருவர் அடிக்கும் அதிகபட்ச ரன்னும் இதுவாகும்.
இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா அணிக்கு 18 பந்தில் டிராவிஸ் ஹெட் 38 ரன்கள் என நல்ல துவக்கம் தந்தார். ஆனால் அடுத்து வந்த வீரர்கள் சொதப்பினார்கள்.
கடைசி ஐந்து ஓவர்களுக்கு 78 ரன்களும், கடைசி இரண்டு ஓவர்களுக்கு 43 ரன்களும் என தேவைப்பட்ட நிலையில், மேக்ஸ்வெல் மற்றும் மேத்யூ வேட் இருவரும் இணைந்து ஆஸ்திரேலியா அணியை கடைசிப் பந்தில் அபாரமாக வெற்றி பெற வைத்தார்கள்.
இறுதி வரை களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்த மேக்ஸ்வெல் 48 பந்தில் 104 ரன்கள் குவித்தார். இது அவருக்கு நான்காவது சர்வதேச டி20 சதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றிக்குப் பின் ஆட்டநாயகன் விருது பெற்ற மேக்ஸ்வெல் கூறும்பொழுது “எல்லாம் மிக வேகமாக பனிக்கு இடையே நடைபெற்ற முடிந்தது. பனிப்பொழிவில் யார்க்கர்களை வீசுவது அவர்களுக்கு மிக கடினமாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் உண்மையில் எவ்வளவு ஸ்கோர் எந்த இடத்தில் வைத்திருக்க வேண்டும் என்று கணக்கு வைக்கவில்லை.
ஆனால் நாங்கள் கடைசி ஓவர் வரை நின்றால், நாங்கள் ஆட்டத்தில் இருப்போம் என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் அதை நோக்கியே சென்றோம். அக்சர் படேலுக்கு ஒரு ஓவர் இருந்ததால், அதை மேத்யூ வேட் பார்த்துக் கொள்ளவும், மற்ற வேகப்பந்துவீச்சாளர்களை நான் பார்த்துக் கொள்ளவும் திட்டம் தீட்டினோம். வேட் எதிர்முனையில் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். அது எனக்கு உதவியாக இருந்தது!” என்று கூறியிருக்கிறார்!