பென் ஸ்டோக்ஸ் சரியில்லைன்னு தெரிஞ்சும்.. பிளேயிங் லெவனில் எடுத்ததற்கு காரணம் என்ன?? – ஸ்டீபன் பிளம்மிங் விளக்கம்!

0
444

பென் ஸ்டோக்ஸ் தனது முழு உடல் தகுதியில் இல்லை. ஆனாலும் அவரை எதற்காக பிளேயிங் லெவனில் எடுத்து விளையாட வைத்தோம் என்று தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார் ஸ்டீபன் பிளம்மிங்.

- Advertisement -

ஐ பி எல் தொடரின் துவக்க போட்டியான குஜராத் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிய போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. இதில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

கடந்த ஐபிஎல் ஏலத்தில் 16.25 கோடி ரூபாய் கொடுத்து எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கே அணிக்கு எடுக்கப்பட்டார். விளையாடிய முதல் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டார். களமிறங்கி பேட்டிங்கில் வெறும் 7 ரன்கள் மட்டுமே அடித்து அவுட்டானார்.

போட்டிக்கு முன்னர் வெளிவந்த தகவலின்படி, பென் ஸ்டோக்ஸ் முழு உடல் தகுதியில் இல்லை என்பதால் துவக்கத்தில் சில போட்டிகள் பந்துவீசமாட்டார். பேட்டிங் மட்டுமே இறங்குவார் என கூறப்பட்டது. இருப்பினும் முதல் போட்டியில் களமிறங்கிய ஸ்டோக்ஸ், பேட்டிங் பவுலிங் என்று எதிலும் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை.

- Advertisement -

178 ரன்கள் அடித்த சிஎஸ்கே அணியின் ஸ்கோரை, 19.2 ஓவர்களில் சேஸ் செய்த குஜராத் அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட ஸ்டீபன் பிளம்மிங், ஸ்டோக்ஸ் உடல்நிலை குறித்தும், அவர் பிளேயிங் லெவனில் இடம் பெற்றது குறித்தும் எழுந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தார் .

தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் பேசியதாவது:

“பௌலிங் செய்யும் உடல் தகுதியில் இல்லை என்பதை நாங்கள் நன்கு உணர்வோம். அவருக்கு முழு கவனம் செலுத்தி வருகிறோம். டெஸ்ட் தொடர் முடிந்தபின் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஐபிஎல் போட்டிகளில் விளையாட வந்திருக்கிறார். ஆகையால் ஸ்டோக்ஸ் உடலில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது.

அவரை வெளியில் அமர்த்தி நம்பிக்கையை குலைக்க வேண்டாம் என்பதற்காகவே விளையாட வைத்தோம். பந்துவீச்சில் பங்களிக்க மற்ற வீரர்கள் இருக்கின்றனர். ஆகையால் துவக்கத்தில் சில போட்டிகள் இவர் களமிறங்கட்டும் அணியில் வீரர்களுடன் நன்றாக இணைந்து செயல்படட்டும் என்ற நோக்கில் களம் இறக்கினோம்.” என்று பிளம்மிங் பேசினார்.