ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்து இந்தியா புறப்படும் முன்பாக, இந்தியா மற்றும் இங்கிலாந்தில் சிலர் கூட ஐந்துக்கு பூஜ்ஜியம் என முழுமையாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இழக்கும் என கூறி வந்தார்கள்.
இந்த நிலையில் நேராக இந்தியா வராமல் அபுதாபி சென்று அங்கு இந்திய சூழ்நிலையில் ஆடுகளங்களை அமைத்து, இங்கிலாந்து அணி தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டது.
இதற்கு அடுத்து இந்தியாவில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் ஜனவரி 25ஆம் தேதி துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், அதிகபட்ச நேரம் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியை கடைசியில் எதிர்பார்க்காத வகையில் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது இங்கிலாந்து.
தற்பொழுது இங்கிலாந்து அணி பற்றியான பார்வை இந்திய தரப்பிலும் மாறி இருக்கிறது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு பேட்டிங்கில் போப் மற்றும் பந்துவீச்சில் டாம் ஹார்ட்லி இருவரும் முக்கியமான காரணமாக இருக்கிறார்கள்.
இதன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி எப்படி தயாராகி வரும் என்பதாக எதிர்பார்ப்புகள் மாறி இருக்கிறது. அதே சமயத்தில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மாண்டி பனேசர் இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்கின்ற அளவுக்கு இங்கிலாந்து தரப்பின் பேச்சு எல்லை மீறி இருக்கிறது.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “போப் மற்றும் டாம் ஹார்லி இருவரும் இப்படியே தொடர்ந்து விளையாடினால் இந்தியா ஒயிட் வாஷ் ஆகிவிடும். இவர்கள் இருவரும் இப்படியே விளையாடுவது தொடரும் என்றால் ஐந்து போட்டிகளையும் இங்கிலாந்து வென்று இந்தியாவுக்கு எந்த வெற்றியும் கிடைக்காமல் போய்விடும்.
இது மிகப்பெரிய வெற்றி இது நடக்கும் என்று யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்ற பிறகு இங்கிலாந்து தோற்கும் என எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அதற்குப் பிறகு போப் விளையாடிய இன்னிங்ஸ் எல்லோரும் பார்த்ததில் சிறந்த ஒன்றாக அமைந்தது.
இதையும் படிங்க : பொல்லார்டு செய்த குறுக்கு வழி.. பாப் கோபம்.. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் கேப் டவுன் மும்பை இந்தியன்ஸ் போட்டியில் பரபரப்பு
வெளிநாட்டு அணிகள் இந்தியாவில் பெற்ற வெற்றிகளில் இது மிகச் சிறந்த வெற்றியாகும். இங்கிலாந்தில் இது மிகப்பெரிய செய்தியாக மாறி இருக்கிறது. நாங்கள் உலகக் கோப்பையை வென்றது போல உணர்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.