117 மீட்டர் பிரம்மாண்ட சிக்ஸர் அடித்த லியாம் லிவிங்ஸ்டன் ; சிக்ஸருக்குப் பின் சந்தேகத்தில் லிவிங்ஸ்டனின் பேட்டை வாங்கிப் பார்த்த ரஷீத் கான் – வீடியோ இணைப்பு

0
1559

2022 ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 48வது போட்டியில், நவிமும்பையின் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில், ஒன்பது ஆட்டங்களில் 16 புள்ளிகளோடு, புள்ளி பட்டியலில் முதல் இடம் வகிக்கும் ஹர்திக் பாண்ட்யா தலைமை தாங்கும் குஜாராத் அணியும், ஒன்பது ஆட்டங்களில் 8 புள்ளிகளோடு, புள்ளி பட்டியலில் எட்டாம் இடம் வகிக்கும், மயங்க் அகர்வாலின் பஞ்சாப் அணியும் மோதிய ஆட்டம் முடிந்திருக்கிறது!

முதலில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, தங்களின் கொஞ்சம் பலகீனமான பேட்டிங் ஆர்டரை மனதில் வைத்து, இலக்கை துரத்தும் அழுத்தத்ததைத் தவிர்ப்பதற்காக, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். விர்திமான் சஹாவோடு களம்புகுந்த சுப்மன் கில், வழக்கம் போல் இந்த முறையும் கிடைத்த நல்ல துவக்கத்தைத் தவறவிட்டு ரன்அவுட் ஆனார். சிறிது நேரத்தில் சஹாவும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த யாரும் நிலைக்கவில்லை. ஆனால் தமிழக இளம் வீரர் சாய் சுதர்சன் நிலைத்து நின்று 50 பந்துகளில் 65 ரன்கள் அடித்து, இருபது ஓவர்களின் முடிவில், குஜராத் அணியை 143 ரன்களுக்கு எடுத்துச் சென்றார். பஞ்சாப் தரப்பில் ககிசோ ரபாடா 4 ஓவர் வீசி 33 ரன்கள் தந்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

அடுத்து பஞ்சாப் இன்னிங்சை இந்த முறை துவங்க, மயங்க் அகர்வாலுக்குப் பதிலாக ஜானி பேர்ஸ்டோ தவானோடு வந்தார். ஆனால் இந்த முறையும் பேர்ஸ்டோ நிலைக்கவில்லை. ஆனால் ஒருமுனையில் தவான் நங்கூரமிட்டு நின்றுவிட்டார். அடுத்து வந்த ராஜபக்சே அவர் பங்குக்கு 28 பந்துகளில் 40 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க பஞ்சாப் நல்ல நிலையை எட்டியது.

ஒருமுனையில் நிலைத்து நின்ற தவான் அரைசதம் அடிக்க, ராஜபக்சேவுக்கு அடுத்து ஆடவந்த லிவிங்ஸ்டன் ஷமியின் ஒரே ஓவரில் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் முடித்துவிட்டார். வெற்றிக்க ஐந்து ஓவர்களில் 27 ரன்கள் தேவைப்பட, ஷமி வீசிய 16வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ், ஒரு பவுண்டரி, ஒரு இரண்டு ரன் என 28 ரன்களை அடித்து ஆட்டத்தை முடித்தார் லிவிங்ஸ்டன். இந்த ஹாட்ரிக் சிக்ஸரில் முதல் சிக்ஸர் பறந்த தூரம் 117 மீட்டர். இந்தத் தொடரில் இதுதான் அதிகபட்ச தூரம். இந்த சிக்ஸரை லிவிங்ஸ்டன் அடித்த பொழுது, ஒரு பக்கம் பெவிலியனிலிருந்து மயங்க் அகர்வாலை வாயைப்பிளந்து வியக்க, ரஷீத்கான் லிவிங்ஸ்டனின் பேட்டை பரிசோதித்து பார்த்தது சுவாரசியமாக இருந்தது!