போட்டியின் 12வது ஓவரில் ரன் அவுட் செய்து பேட்ஸ்மேனை கதிகலங்க வைத்துள்ளார் சிராஜ்.
இந்தியா – இலங்கை அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சுப்மன் கில் மற்றும் விராட் கோலி இருவரும் சதம் அடிக்க, இந்திய அணியின் ஸ்கோர் 350 ரன்கள் கடந்தது.
விராட் கோலி 166 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். ஐம்பது ஓவர்கள் முடிவில் இந்திய அணி 390 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்து மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்தது.
பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு முகமது சிராஜ் அச்சுறுத்தலாக திகழ்ந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்த்தி கதிகலங்கச் செய்தார். பத்து ஓவர்களில் வெறும் 32 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி ஒரு ரன் அவுட் செய்தார்.
இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் உள்ளே வந்தது மற்றும் வெளியே சென்றது தெரியாத அளவிற்கு ஆட்டம் வெகுவிரைவாக முடிந்துவிட்டது. வெறும் 73 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியையும் சந்தித்தனர்.
போட்டியின் 12வது ஓவரில் சமிக்கா கருனரத்னே பேட்டிங் செய்து கொண்டிருந்தார். சிராஜ் பந்துவீச்சை எதிக்கொண்டு அடிக்க முயற்சித்தபோது, பந்து சிராஜ் வசம் சென்றது. பந்தை எடுத்த அடுத்த நொடியே ஸ்டம்பை நோக்கி எறிந்தார்.
கிரீசை உள்ளே கால் வைக்காமல், காலை தூக்கியபடி நின்ற பேட்ஸ்மேனுக்கு மூன்றாம் நடுவர் ரன் அவுட் என அறிவித்தார். என்ன நடக்கிறது என்பதே புரியாமல் பேட்ஸ்மேன் சமிக்கா பெவிலியன் திரும்பினார். சமயோஜிதமாக யோசித்து ரன்-அவுட் செய்த சிராஜுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
வீடியோ:
— The sports 360 (@Thesports3601) January 15, 2023