பீல்டிங் செய்யும் போது பந்தைக் கேட்ச் பிடிப்பதற்கு முன்பே கீழே வழுக்கி விழுந்த ஹார்திக் பாண்டியா – வீடியோ இணைப்பு

0
163
Hardik Pandya falls down during fielding

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் முதல் குவாலிபையர் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில், புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ஹர்திக் பாண்ட்யா தலைமைத் தாங்கும் குஜராத் அணிக்கும், புள்ளி பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்த சஞ்சு சாம்சன் தலைமைத் தாங்கும் ராஜஸ்தான் அணிக்கும் இடையை தற்போது நடந்தது வருகிறது.

இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். மொகம்மத் ஷமியின் முதல் ஓவரில் இரு பவுண்டரிகளை அடித்து சிறப்பாக ஜோஸ் பட்லர் துவக்கினாலும், யாஷ் தயாலின் அடுத்த இரண்டாவது ஓவரின் கடைசிப் பந்தில் இந்திய இளம் வீரர் யாஷ்வி ஜெய்ஸ்வால் எட்டுப் பந்துகளில் மூன்று ரன் மட்டுமே எடுத்து, விக்கெட் கீப்பர் சஹாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

- Advertisement -

ஜோஸ் பட்லர் சிறப்பாக ஆரம்பித்தாலும், களத்தில் தொடர்ந்து நின்றாலும் அவரது ஆட்டம் இயல்பாக இல்லாமல் தடுமாற்றமாகவே இருந்தது. இதனால் அவரால் ரன்களை கொண்டுவர முடியவில்லை. ஆனால் கேப்டன் சஞ்சு சாம்சன் மூன்றாவது விக்கெட்டுக்கு வந்து அதிரடியாக ஆடியதால், ஜோஸ் பட்லரின் தடுமாற்றம் ராஸ்தான் அணியை பாதிக்கவில்லை. சாய் கிஷோர் வீசிய ஆட்டத்தின் பத்தாவது ஓவரில் சஞ்சு சாம்சன் கொஞ்சம் அவசரப்பட்டு தேவையில்லாத ஷாட்ஸ் விளையாடி 26 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதற்கு அடுத்து தேவ்தத் படிக்கல் ஆட வந்தும், ஜோஸ் பட்லரின் பேட்டிங் தடுமாற்றம் முடிவுக்கு வரவே இல்லை. தேவ்தத் படிகல்லே இரண்டு சிக்ஸர், இரண்டு பவுண்டரி என ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். அவர் 20 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதற்குப் பிறகு ஹெட்மயர் களத்திற்கு வர, அவரே ஆட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பது போல்தான் இருந்தது.

யாஷ் தயால் வீசிய ஆட்டத்தின் 17வது ஓவரில் ஜோஸ் பட்லர் தாக்குவது என முடிவு செய்து, ஷார்ட்டாக பவுன்ஸ் பெரிதாய் இல்லாது வீசப்பட்ட முதல் பந்தை நேராக லாங்-ஆப் திசையில் தூக்கி அடித்தார். பந்து காற்றில் பறந்து கொண்டிருந்தபோது, அங்குச் சற்றுத் தூரமாய் நின்றிருந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் கைகளில் எளிமையாய் கேட்ச் ஆவதுபோல் தெரிந்தது. பந்தை நோக்கி முன்நகர்ந்து வந்த ஹர்திக் பாண்ட்யா எதிர்பாராதவிதமாய் மைதானத்தின் புல்தரையில் கால் வழுக்கி அப்படியே சரிந்து விழ, பந்து அவரது தலைக்கு மேலே தாழ்வாக பறந்து போய் பவுண்டரியாக மாறியது. கீழே விழுந்த ஹர்திக் பாண்ட்யா பந்து தலைக்கு மேல் போவதை பரிதாபமாக பார்த்தபடி கீழே கிடந்தார்.

- Advertisement -

இந்த ஆட்டத்தில் கடைசியாய் ஜோஸ் பட்லர் சந்தித்த 18 பந்துகளில் மட்டும் 50 ரன்களை அடித்திருக்கிறார். குறிப்பிட்ட 17வது ஓவரில் மட்டும் நான்கு பவுண்டரிகள் அடித்தார். அடுத்த 18வது ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்தார். தனது முதல் சிக்ஸரை ஷமியின் ஆட்டத்தின் 19வது ஓவரில்தான் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாய் இருபது ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 188 ரன்களை குவித்திருக்கிறது. ஹர்திக் பாண்ட்யா அந்த கேட்ச்சை பிடித்திருந்தால் இந்த ஸ்கோர் வருமா என்றால் சந்தேகம்தான்!