2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் சில நிமிடங்களுக்கு முன்னர் தொடங்கியது. மும்பையில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் விளையாடி கொண்டிருக்கின்றனர். போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி தற்பொழுது பேட்டிங் செய்து கொண்டிருக்கிறது.
சென்னை அணியில் இன்று சுரேஷ் ரெய்னா இடம்பெறவில்லை. முதன் முறையாக இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா விளையாடவும் போவதில்லை. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடாத நிலையில், தற்போது வர்ணனையாளராக போட்டியை தொகுத்து கொண்டிருக்கிறார்.
ரெய்னாவை கைபற்றாத சென்னை அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் முதன்முதலாக 2010ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை கைப்பற்றியது. அந்த ஆண்டு சென்னை அணிக்காக ரெய்னா 16 போட்டிகளில் 4 அரைசதங்களுடன் 520 ரன்கள் குவித்தார்.சென்னை அணி இரண்டாவது கோப்பையை கைப்பற்றிய வருடமான 2011ம் ஆண்டிலும் சிறப்பாக விளையாடி 16 போட்டிகளில் 4 அரைசதங்களுடன் 438 ரன்கள் குவித்தார்.
அதேப்போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது கோப்பையை கைப்பற்றிய வருடமான 2018ஆம் ஆண்டும் சுரேஷ் ரெய்னா 15 போட்டிகளில் நான்கு அரைச் சதங்களுடன் 445 ரன்கள் குவித்தார்.
குறிப்பாக 2008 முதல் 2019ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் 300 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரரும் ரெய்னாவே. அப்படி சிறப்பாக விளையாடிய சுரேஷ் ரெய்னா கடந்த ஆண்டு சென்னை அணிக்காக 12 போட்டிகளில் விளையாடி 160 ரன்கள் மட்டுமே குவித்திருந்தார்.
கடந்தாண்டு சரியாக விளையாடாத காரணத்தினால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு சென்னை அணி ரெய்னாவை கைப்பற்றவில்லை. அதுமட்டுமின்றி நடந்து முடிந்த மெகா ஏலத்தில் சென்னை அணி உட்பட வேறு எந்த அணியும் அவரை கைப்பற்றாதது குறிப்பிடத்தக்கது.
தனது ஆசையை வெளிப்படையாக கூறிய ரெய்னா
வர்ணனையாளராக தனது பணியை இன்று முதல் தொடங்கியுள்ள சுரேஷ் ரெய்னா ஸ்டுடியோவில் வெளிப்படையாக தனது ஆசையை கூறியிருக்கிறார்.”மைதானத்தை கடந்து ஸ்டுடியோவுக்கு வரும் வேளையில் அமைதியாக மஞ்சள் நிற ஜெர்சியை( சிஎஸ்கே ஜெர்சி) அணிந்து கொண்டு மைதானத்திற்குள் நுழைய வேண்டுமென ஆசைப்பட்டேன்” என்று உணர்ச்சிபூர்வமாக கூறியுள்ளார்.
Suresh Raina 🥺💔 pic.twitter.com/nztD5RcO4E
— Kanan Shah (@KananShah_) March 26, 2022
சுரேஷ் ரெய்னா இவ்வாறு கூறியதை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் சென்னை அணி மற்றும் ரெய்னா ரசிகர்கள் அனைவரும் “வி மிஸ் யூ ரெய்னா” என்று பதிவிட்டு வருகின்றனர்.