போட்டியின் நடுவே ஸ்ரேயாஷ் ஐயருக்கு ஷார்ட் பால் வீசச் சொன்ன மெக்கல்லம் ! கிரிக்கெட் விதிமுறையை மீறினாரா ? வீடியோ இணைப்பு

0
428
Brendon McCullum bouncer plan for shreyas iyer wicket

இந்திய அணி தற்போது இங்கிலாந்திற்கு மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று விளையாட சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதில் முதலில் ஒரு டெஸ்ட் போட்டியில் கடந்த 5ஆம் தேதி முதல் பர்மிங்ஹாம் நகரின் எட்ஜ்பஸ்டன் நகரில் விளையாடி வருகிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் டாஸில் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார். முதலில் விளையாடிய இந்திய அணி, ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா இருவரின் சிறப்பான ஆட்டத்தால் சதங்களால் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.

- Advertisement -

இந்த இன்னிங்ஸில் ஸ்ரேயாஷ் ஐயர் ஆன்டர்சனின் ஷார்ட் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். ஸ்ரேயாஷ் ஐயருக்கு ஷார்ட் பந்துகளில் பெரிய அளவிற்குப் பலகீனம் இருக்கிறது. இதை எதிரணிகள் ஒரு வியூகமாகவே அவருக்கு எதிராகப் பயன்படுத்தி வருகின்றன.

தற்போது இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா ஆட்டமிழந்த பிறகு ஸ்ரேயாஷ் ஐயர் களமிறங்க வந்தார். அப்போது மைதானத்திற்கு வெளியே பெவிலியனில் அமர்ந்திருந்த இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லம், ஸ்ரேயாஷ் ஐயருக்கு ஓவருக்கு இரண்டு ஷார்ட் பந்துகள் வீசி தாக்குதல் செய்யுமாறு சைகை செய்தார். ஐ.பி.எல் தொடரில் ஸ்ரேயாஷ் ஐயர் கேப்டனாக இருக்கும் கொல்கத்தா அணியின் தலைமைப் பயிற்சியாளராக பிரன்டன் மெக்கல்லம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரன்டன் மெக்கல்லமின் இந்தச் செய்கை கிரிக்கெட் விதிகளின் படி தவறான ஒன்றாகும். போட்டி ரெப்ரி இப்படி வெளியிலிருந்து ஆலோசனைகள் தருபவர்களை களத்தில் இருந்து வெளியேற்றவும் செய்ய கிரிக்கெட் விதிகளில் இடமிருப்பதாய், தமிழ் கிரிக்கெட் வர்ணனையில் இருந்த இந்திய முன்னாள் வீரர் டபிள்யூ.வி.ராமன் தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் இந்த இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று பவுண்டரிகளோடு 19 ரன்கள் எடுத்துத் தைரியமாய் விளையாடிய ஸ்ரேயாஷ் ஐயர், மேத்யூ போட்ஸ் வீசிய ஷார்ட் பந்தை அடிக்கப் போய், நேரம் தவறியதால் ஆன்டர்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஷார்ட் பந்துக்கு ஸ்ரேயாஷ் ஐயரின் தடுமாற்றம் அவருக்குப் பெரிய பிரச்சினையாக உள்ளது!