நியூசிலாந்து அணி தற்போது இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்து, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2ஆம் தேதி ஆரம்பித்து நடந்துகொண்டிருக்கிறது.
இந்தப் போட்டி தற்போது மூன்று நாட்களின் முடிவில் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. முதலில் டாஸில் ஜெயித்த கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்ய, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 132 ரன்களுக்கு சுருண்டது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியில் அறிமுக வீரராகக் களமிறங்கிய மேத்யூ போட்ஸூம், ஆண்டர்சனும் தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்திற்குத் துவக்க வீரர்கள் அரைசத துவக்கத்தை அளித்தாலும், பின்பு வந்த வீரர்கள் மிக மோசமாய் சொதப்ப, நியூசிலாந்து பந்து வீச்சாளர்களும் மிகச் சிறப்பாகப் பந்துவீச இங்கிலாந்து அணியும் 141 ரன்களில் சுருண்டது. நியூசிலாந்து தப்பில் டிம் செளதி 4, டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
நியூசிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் முதல் நான்கு விக்கெட்டுகளை சீக்கிரம் இழக்க, டேரில் மிட்ச்செல் 108, டாம் ப்ளூன்டல் 96 என ரன்கள் அடித்து அணியை மீட்க, நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 285 ரன்களுக்கு ஆட்டமிழந்து, இங்கிலாந்திற்கு 277 ரன்களை இலக்காக வைத்தது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், மேத்யூ போட்ஸ் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்கள்.
அடுத்து 277 ரன் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கும் முதல் நான்கு விக்கெட்டுகள் சீக்கிரத்திலேயே விழுந்துவிட, நோ-பால் அவுட்டிலிருந்து தப்பித்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அரைசதமடித்து ஆட்டமிழக்க, ஜோ ரூட் 77 ரன்களோடு களத்தில் இருக்க, இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்திருக்கிறது. வெற்றிக்கு இன்னும் 61 ரன்கள் தேவை. கைவசம் 5 விக்கெட்டும், இரண்டுநாளும் இருக்கிறது. நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
இந்த ஆட்டத்தில் இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில், 42வது ஓவரை டிரெண்ட் போல்ட் வீச, அதை ரூட் லெக் ஸைட் மடக்கி அடிக்க, ரன் ஓட முயற்சித்த பென் ஸ்டோக்ஸ் முடியாமல் கிரிஸிக்குள் திரும்ப வந்தார். பந்தை பிடித்து இங்கிலாந்து வீரர் அப்போது அடிக்க, அது பென் ஸ்டோக்ஸ் மேல் பட்டு ஓவர் த்ரோவாக மாறியது.
இதே லார்ட்ஸ் மைதானத்தில் இதே நியூசிலாந்து இதே டிரெண்ட் போல்ட் பந்துவீச்சில்தான், 2019 உலகக்கோப்பையில் பென் ஸ்டோக்ஸ் ரன் எடுக்க ஓடும்போது, பிடித்து அடித்த பந்து அவரது பேட்டில் பட்டு பவுண்டரியாய் மாறும். இந்த ஓவர் த்ரோ பவுண்டரிதான் இங்கிலாந்து கோப்பையை வெல்ல காரணமாகவும் இருந்தது.
இன்றும் இதேபோல் நடக்க, இந்த முறை பென் ஸ்டோக்ஸ் “நான் எதுவும் செய்யவில்லை. என் மீது தவறில்லை” என்பது போல் கையைத் தூக்கிக் காட்ட, டிரெண்ட் போல்ட் அவரிடம் பந்து ஓவர் த்ரோவானதை காட்ட, ஜோ ரூட்டும் தமாசாய் கையைத் தூக்கிக் காட்டினார். வர்ணனையில் இருந்தவர்கள், இரசிகர்கள், வீரர்களென எல்லோருமே இந்த நிகழ்வின் போது சிரித்துவிட்டார்கள். இது பழைய சோகமான நினைவை கிளறினாலும், சிரிப்பைத்தான் வரவழித்தது!
If you know, you know 😅
— England Cricket (@englandcricket) June 4, 2022
🏴 #ENGvNZ 🇳🇿 pic.twitter.com/ZyIcvwkk8B