டி20 உலகக்கோப்பை வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய ஆஸ்திரேலிய ‌அணி- முகம் சுழிக்கும் ரசிகர்கள்

0
116
Australian Team Drinking from Shoe Celebration

டி20 உலக கோப்பை தொடரின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்று யாருமே நினைக்காத இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் நேற்று பலப்பரிட்சை மேற்கொண்டன. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய நியூஸிலாந்து அணிக்கு சிறப்பான ஆரம்பம் கிடைக்கவில்லை. அந்த அணியின் மிச்சல் 11 ரன்களுக்கு வேகமாக அவுட் ஆனதால் பவர் பிளே முடிவில் 32 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது நியூசிலாந்து.

அதன்பிறகு நியூசிலாந்து அணி பொறுமையாக விளையாடி 10 ஓவர்கள் முடிவில் 59 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் முதல் 10 ஓவர்களில் பொறுமையாக விளையாடி மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். அதன் பிறகு அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்கு நல்ல ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்கை வெளுத்து வாங்கினார் வில்லியம்சன். நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு வழக்கம்போல் கேப்டன் பின்ச் வேகமாக அவுட் ஆனாலும் அதன் பிறகு ஆடிய வார்னர் மற்றும் மார்ஷ் இணை சிறப்பாக விளையாடியது. நியூசிலாந்து அணியின் எந்த பந்துவீச்சாளரையும் எளிதாக இந்த ஜோடி சமாளித்தது. இருவருமே அரைசதம் அடித்து நியூசிலாந்து அணியின் டி20 உலகக் கோப்பை கனவை தகர்த்தனர். 53 ரன்களுக்கு வார்னர் அவுட் ஆனாலும் அதன் பிறகு வந்த மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 28 ரன்கள் குவித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி தனது முதல் டி20 உலக கோப்பையை வென்றது.

கிட்டத்தட்ட அனைத்து பிரதான கோப்பைகளையும் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி இதுவரை டி20 உலகக் கோப்பையை மட்டும் வெல்லாமல் இருந்தது. தற்போது இதையும் பெற்று விட்டதால் அந்த அணி உற்சாகத்தில் மிதந்தது. உற்சாகத்தின் உச்சமாக டிரெஸ்ஸிங் ரூமில் அணியின் வெற்றியை கொண்டாடிய போது அந்த அணியின் விக்கெட் கீப்பர் வேட், தான் அணிந்திருந்த ஷூவை கழற்றி அதில் பீர் ஊற்றி குடித்தார். பின்பு அதே சுவை வாங்கி அந்த அணியின் ஆல் ரவுண்டர் ஸ்டொய்னிஸ் மறுபடியும் பீர் ஊற்றி குடித்தார். என்னதான் கொண்டாட்டமாக இருந்தாலும் இப்படியா என்று ரசிகர்கள் முகம் சுழித்தவாறு இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.