இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருக்கும் நிலையில் மூன்றாவது போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலைமையில் இந்திய அணி உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர், மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு தயாராகும் விதம் குறித்தும் தோல்விக்குப் பிறகு கௌதம் கம்பீரின் அணுகுமுறை குறித்தும் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
சுழற் பந்துவீச்சை எப்போதுமே சமாளித்து விளையாடும் இந்திய அணி, சமீப காலமாகவே சுழற்பந்து வீச்சில் தொடர்ந்து தடுமாறி வருகிறது. ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை பிளாட் டிராக்குகளில் நன்றாக விளையாடி வெற்றிகளை பெறும் சமயத்தில், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் தோல்வியையே சந்தித்து வருகிறது.
இது போன்ற ஆடுகளங்களில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை நம்பியே பெரும்பாலும் இந்திய அணி உள்ளது. அவர்கள் இருவரும் ஓய்வு பெறும் சமயத்தில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இந்திய அணியின் நிலைமை மோசமாகிவிடும். குறிப்பாக இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் லெக்ஸ்பின்னரான வாண்டர்சேவின் பந்துவீச்சில் இந்திய அணி தொடர்ச்சியாக ஆறு விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் தரமான பந்துவீச்சுக்கு எதிராகவும், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலையிலும் வெற்றி பெறுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு எனவும், சுழற்பந்துவீச்சுக்கு எதிராக கம்பீர் நிறைய ஆலோசனைகள் வழங்கினார் என்றும் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “தரமான பந்துவீச்சு தாக்குதலுக்கு எதிராக இதுபோல சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலைகளில் வெற்றி பெறுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். இது அடுத்து வரும் பெரிய தொடர்களுக்கு எங்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுக்கும். சுழற் பந்து வீச்சுக்கு எதிராக எவ்வாறு பேட்டிங் செய்வது என்பது குறித்து நிறைய ஆலோசனைகளை கௌதம் கம்பீர் வழங்கினார். சுழற்பந்துக்கு எதிராக அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன்.
இதையும் படிங்க:கோலி ரோகித் ரிட்டயர்டு ஆகட்டும்.. இந்திய அணி எப்படி அந்த இடத்தில் இருக்கும்னு பார்க்கிறேன்.. பாகிஸ்தான் தன்வீர் அகமது பேச்சு
எங்கள் அணுகுமுறையில் சிறிய மாற்றம் இருக்கும். எனவே அடுத்து வரும் போட்டியில் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர் கொண்டு விளையாடுவோம்” என்று வாஷிங்டன் சுந்தர் கூறியிருக்கிறார். இந்த தொடரில் இலங்கை அணி முன்னிலை பெற்று இருக்கும் நிலையில் அடுத்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.