வெயிட் காட்டிய ஹைதராபாத் அணியை பொட்டலம் கட்டிய ராஜஸ்தான் அணி!

0
172
RR

ஐபிஎல் 16ஆவது சீசனில் நான்காவது போட்டி இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் ஹைதராபாத் சன் ரைஸர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்து முடிந்திருக்கிறது!

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் ஹைதராபாத் அணி பந்து வீச, ராஜஸ்தான் அணியின் முதல் மூன்று வீரர்கள் பட்லர் 22 பந்துகளில் ஏழு பவுண்டரி மூன்று சிக்ஸர்கள் உடன் 54 ரன்கள், ஜெய்ஸ்வால் 37 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகளுடன் 54 ரன்கள், கேப்டன் சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 55 ரன்கள் குவிக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பதினாறாவது ஐபிஎல் சீசனில் 200 ரண்களை குவித்த முதல் அணியாக ராஜஸ்தான் தங்களை பதிவு செய்து கொண்டது. ஹைதராபாத் அணி தரப்பில் மூன்று ஓவர்கள் பந்து வீசி 23 ரன்கள் விட்டுத்தந்து இரண்டு விக்கெட்டுகளை தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் கைப்பற்றி அசத்தினார்.

இதற்கு அடுத்து பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் ஷர்மா மற்றும் ராகுல் திரிபாதி இருவரது விக்கட்டுகளையும் முதல் ஓவரிலேயே வீழ்த்தி அதிர்ச்சியை தந்தார் ட்ரண்ட் போல்ட்.

இதிலிருந்து ஹைதராபாத் அணியால் கடைசி வரை மீளவே முடியவில்லை. ராஜஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர் சாகல் மயங்க் அகர்வால், ஹாரி புரூக், ஆதில் ரஷீத், புவனேஸ்வர் குமார் ஆகியோர் விக்கட்டுகளை நான்கு ஓவர்கள் பந்து வீசி 17 ரன்கள் விட்டுக் கொடுத்து வீழ்த்தினார். ரவிச்சந்திரன் அஸ்வின் கிளன் பிலிப்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார். ஹோல்டர் வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டை வீழ்த்தினார்.

- Advertisement -

கடைசி இரண்டு ஓவர்களுக்கு ஜோடி சேர்ந்த காஷ்மீரை சேர்ந்த அப்துல் சமத் மற்றும் உம்ரான் மாலிக் இருவரும் கடைசி நேரத்தில் கொஞ்சம் அதிரடி காட்டினார்கள். குறிப்பாக உம்ரன் மாலிக் ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு இமாலயா சிக்ஸர்களை விளாசி அசத்தினார். 8 பந்துகளில் 19 ரன்களை அவர் குவித்தார். அப்துல் சமத் 31 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து 72 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் முதல் வெற்றியை பதிவு செய்து கொண்டது.