இந்தியா அணி வீரர்கள் இன்னும் சற்று நாட்களில் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். அங்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரிலும் விளையாட தயாராக இருக்கின்றனர். டெஸ்ட் அணிகளுக்கான வீரர்கள் பட்டியல் இரு அணி நிர்வாகத்தின் மூலமாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வென்றதன் மூலம், ஐசிசி டெஸ்ட் தரவரிசை புள்ளி பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. தற்பொழுது இந்திய அணிக்கு என்ன சவால் என்று கேட்டால், இதுவரை இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரைக் கூட கைப்பற்றியது இல்லை. எனவே முதல் முறையாக இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி சாதனை படைக்குமா என்கிற ஆர்வத்தில் அனைத்து இந்திய வீரர்களும் தற்பொழுது உள்ளனர்.
சீனியர் கிரிக்கெட் வீரரை புறக்கணித்த விவிஎஸ் லக்ஷ்மன்
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில், ஸ்ரேயாஸ் ஐயரை அஜிங்கிய ரஹானேவுக்கு பதிலாக விளையாட வைக்க வேண்டும் என்று தற்பொழுது கூறியுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் தற்பொழுது நியூசிலாந்து அணிக்கு எதிராக தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் மற்றும் அரை சதம் என அடுத்தடுத்து அதிரடியாக அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாடி மொத்தமாக 345 ரன்கள் குவித்துள்ளார். அவரது பேட்டிங் ஆவெரேஜ் 50.5 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 58.55 என நல்ல நிலையில் இருக்கிறது. மறுபக்கம் அஜிங்கிய ரஹானே சமீப காலமாகவே டெஸ்ட் போட்டிகளில் சிறந்த ஃபார்மில் இல்லை. எனவே முதல் டெஸ்ட் போட்டியில் ரஹானே இடத்தில் ஸ்ரேயாஸ் விளையாட வைக்கப்பட வேண்டும் என்று விவிஎஸ் லக்ஷ்மன் விளக்கமளித்துள்ளார்
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ஆம் தேதி ( பாக்ஸிங் நாள் ) அன்று நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.