டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி முடிசூடா மன்னனாக திகழ்ந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து இரண்டு முறை தகுதி பெற்ற இந்திய அணி மூன்றாவது முறையும் இறுதிப்போட்டிக்கு சென்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் இந்திய அணிக்கு அது போதாத காலமாக மாறி, தொடர்ந்து தோல்விகளை தழுவியதால் பைனலுக்கு செல்ல முடியாத நிலை தற்போது ஏற்பட்டு இருக்கிறது. இந்திய அணியில் பும்ரா தனி ஆளாக நின்று எதிரணியின் விக்கெட்டுகளை வேட்டையாடினாலும், பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து தடுமாறியதால் தான் இந்திய அணி தோல்வியை தழுவியது.
விராட் கோலியின் பேட்டிங் வீக்னஸ்:
குறிப்பாக இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பாக கருதப்பட்ட விராட் கோலி தொடர்ந்து ஒரே ஸ்டைலில் ஆப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை அடித்து ஆடி ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். இதற்கு காரணம் விராட் கோலி இந்த வகை பந்துகளை பிரெண்ட் புட்(Front foot) எடுத்து ஆடி தவறான முறையில் ஷாட் விளையாடியது தான் ஆட்டமிழப்புக்கு காரணம் என்று கூறப்பட்டது.
இந்த தருணத்தில் தான் விராட் கோலி இந்த குறையை சரி செய்வதற்காக தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு இருக்கிறார். இதற்காக விராட் கோலி யாரை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதுதான் தற்போது ரசிகர்களின் புருவத்தை உயர்த்தி இருக்கிறது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர், பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர், மற்றொரு பயிற்சியாளரான டென் டோசேட் போன்றவர்களை எல்லாம் விராட் கோலி விட்டுவிட்டு இந்திய அணிக்காக முன்னாள் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்ட சஞ்சய் பங்கருடன் இணைந்து கோலி விசேஷ பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.
மும்பையில் கோலி எடுத்த சிறப்பு பயிற்சி:
கடந்த ஆண்டு முழுவதும் ஓய்வு கிடைத்தால் லண்டனில் தங்கி இருந்த கோலி,இம்முறை மும்பையில் சஞ்சய் பங்கருடன் முகாமிட்டு தீவிர பயிற்சியை ஈடுபட்டு வருகிறார். ஆப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தை பேக் புட்(Back foot) எடுத்து ஆடும் முறையை கோலி முயற்சி செய்து வருகிறார். இதற்கான பயிற்சி வகைகளை சஞ்சய் பங்கர் வழங்கி இருக்கிறார்.
விராட் கோலி, அடுத்தது வரும் ஜனவரி 30 ஆம் தேதி தொடங்க உள்ள ரயில்வேஸ் அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடுகிறார். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் பாகிஸ்தான், துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை போன்ற தொடர்களில் விராட் கோலி பங்கேற்கிறார்.
வெள்ளை நிற கிரிக்கெட் பந்துகளில் விராட் கோலி அபாரமாக விளையாடினாலும் இதே ஆப் ஸ்டம்ப் வீக்னசை வைத்து விராட் கோலியை ஆட்டம் இழக்க எதிரணிகள் திட்டம் போட்டு இருக்கிறார்கள். அதனை உடைக்கவே விராட் கோலி இந்த விசேஷ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.






