இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
மோசமான பேட்டிங் ஃபார்மில் விராட் கோலி
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை முதல் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணிக்கு இது முக்கிய தொடராக பார்க்கப்படுகிறது. அதில் குறிப்பாக இந்திய அணியின் பேட்டிங் துறையில் விராட் கோலி மட்டுமே அதிகம் சார்ந்திருக்கிறது. விராட் கோலி சமீப காலமாக மோசமான பேட்டிங் சரிவினை சந்தித்து வருகிறார். சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் மோசமாக விளையாடி இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் சூழ்நிலையில் இருப்பதால் இந்திய அணி வருவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே விராட் கோலி ஆஸ்திரேலியா சென்று அங்கு தனது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் விராட் கோலி பயிற்சி பெறும் முறை குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
விராட் கோலி இப்படித்தான் தயாராகிறார்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “பொதுவாக விராட் கோலி பெரிய நாடுகளில் டெஸ்ட் தொடருக்கு சென்று விளையாடும் போது தனிப்பட்ட முறையில் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக தீவிரமான முறையில் தயாராகுவார். போட்டி தொடங்க 10 முதல் 12 நாட்களுக்கு முன்பாகவே வந்து நிறைய பயிற்சிகளில் ஈடுபடுவார். ஒவ்வொரு செஷனிலும் 200 முதல் 250 பந்துகள் வரை எதிர் கொண்டு விளையாடுவார். அவர் வழக்கமாக கிடைக்கும் கடினமான ஆடுகளங்களில் பந்துவீச்சாளர்களை பந்து வீசச் சொல்லி பயிற்சி பெறுவார்.
இதையும் படிங்க:34 பவுண்டரி 2 சிக்ஸ்.. சேவாக் மகன் மாஸான சம்பவம்.. என் பையன் தோனி ஆகணும்.. தந்தை விருப்பம்
பயிற்சிகளில் தீவிரமாக தயாராவது டெஸ்ட் போட்டிக்கு தயாராக எளிதாக இருக்கும். ஸ்டார்க் மற்றும் சக பந்துவீச்சாளர்கள் விராட் கோலிக்கு ஐந்தாவது மற்றும் ஆறாவது ஸ்டெம்புக்கு வெளியே வீசி விக்கெட் பெறுவதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர். எனவே அதை முறியடிக்க விராட் கோலி கடுமையாக உழைக்கிறார். அவர் முதல் டெஸ்ட் போட்டிக்கு களமிறங்குவதற்கு முன்னதாக சுமார் 1000 முதல் 1500 பந்துகளை சந்தித்து இருப்பார் . அது அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு போதுமான உத்வேகத்தை கொடுக்கும்” என்று கூறி இருக்கிறார்.






