இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி, வரவிருக்கும் 2027 உலகக் கோப்பை ஃபைனல் போட்டியில் சேஸிங் செய்து அணியை வெற்றி பெற வைப்பதே தனது லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னதாக பேசிய அவர், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கும் இந்த தருணத்திலும் போட்டியை வென்று தரும் முனைப்பு குறையவில்லை என்று வெளிப்படுத்தினார்.
மேலும், தனிப்பட்ட சாதனைகளை விட அணிக்கு உலகக் கோப்பை கோப்பையை கைப்பற்றி தருவதே தனக்கு மிக முக்கியமான இலக்கு என்றும் அவர் உறுதியாக கூறியுள்ளார்.
இதுகுறித்து விராட் கோலி பேசும்போது “நான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் அணிக்கு வெற்றியை தேடித்தரும் நபராக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். 2027 ஃபைனல் போட்டியில் சேஸிங் செய்யும்போது ஒரு மேட்ச் வின்னிங் நாக் விளையாட வேண்டும் என்பதே எனது கனவு” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர் “தனிப்பட்ட கனவை விட உலகக் கோப்பையை வெல்வதுதான் முக்கியம், அது நடந்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். களத்தில் நின்று அணியை ஆபத்தில் இருந்து காப்பாற்றுவது போன்ற திருப்தி ஒரு பேட்ஸ்மேனுக்கு வேறு எதுவும் தருவதில்லை” என்று முடித்தார்.






