இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி ஆதரவு அளித்துள்ளார். அவர்களை இந்திய ஒருநாள் அணியில் இருந்து ஒதுக்கும் முயற்சிகளை அவர் கடுமையாக எதிர்த்துள்ளார். இருவரும் 2027 உலகக் கோப்பை வரை அவர்கள் தொடர்ந்து ஆட வேண்டும் என்று அப்ரிடி வலியுறுத்தினார்.
இது குறித்து பேசிய அவர், “விராட் மற்றும் ரோஹித் இந்திய பேட்டிங் வரிசையின் முதுகெலும்பு என்பது உண்மை. 2027 உலகக் கோப்பை வரை அவர்களால் ஆட முடியும் என்று அப்ரிடி கூறியுள்ளார். இந்த இரு நட்சத்திரங்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பலவீனமான அணிகளுடன் மோதும் போது புதிய வீரர்களுக்கு வாய்ப்பளித்து இவர்களுக்கு ஓய்வு அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
கம்பீரின் தவறான முடிவு:
தனது ஆட்ட நாட்களில் இந்திய பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் பல முறை களத்தில் மோதலில் ஈடுபட்ட அப்ரிடி, அவரை விமர்சித்தார். “கௌதம் தனது பணியைத் தொடங்கிய விதத்தைப் பார்த்தால், தான் நினைப்பதும் சொல்வதும் தான் சரி என்று அவர் கருதியது போல் இருந்தது. ஆனால், காலப்போக்கில் நீங்கள் எப்போதும் சரியாக இருக்க முடியாது என்று நிரூபணமானது,” என்று அப்ரிடி குறிப்பிட்டார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த தனது சாதனையை ரோஹித் சர்மா முறியடித்ததில் ஷாஹித் அப்ரிடி மகிழ்ச்சி தெரிவித்தார். “சாதனைகள் முறியடிக்கப்படவேண்டியவைதான். நான் எப்போதும் விரும்பும் ஒரு வீரர் இந்தச் சாதனையை முறியடித்ததில் மகிழ்ச்சி,” என்று அவர் கூறினார்.
ரோகித்துக்கு பாராட்டு:
மேலும், “எனது அதிவேக சத சாதனை ஏறக்குறைய 18 ஆண்டுகள் நீடித்தது, ஆனால் அதுவும் இறுதியில் முறியடிக்கப்பட்டது. ஒரு வீரரால் சாதனை அமைக்கப்பட்டு, மற்றவரால் முறியடிக்கப்படுவதுதான் கிரிக்கெட்,” என அப்ரிடி விளக்கினார். ராய்ப்பூரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், அப்ரிடியின் 398 போட்டிகளில் 351 சிக்ஸர்கள் சாதனையை ரோஹித் 279 போட்டிகளில் 355 சிக்ஸர்கள் அடித்து முறியடித்தார்.
இதையும் படிங்க: இந்திய அணியில் இவருக்கு மாற்று வீரரே கிடையாது.. எதிரணிக்கு ஆபத்தை தரக் கூடியவர் என பார்த்தீவ் பட்டேல் பாராட்டு
“2008 ஐபிஎல் சீசனில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ரோஹித்துடன் எனது ஒரே ஐபிஎல் சீசனில் விளையாடியபோது, அப்போதே அவரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பயிற்சியின் போது, அவரது தரமான ஆட்டம் என்னை கவர்ந்தது. ஒருநாள் ரோஹித் இந்தியாவுக்காக விளையாடுவார் என அப்போதே எனக்குத் தெரியும், அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்துள்ளார்,” என்றும் அப்ரிடி கூறினார்.






