கேரளாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் விக்னேஷ் புத்தூர், லிஸ்ட் ஏ போட்டிகளில் ஆறு கேட்சுகள் பிடித்து உலக சாதனை படைத்துள்ளார். விக்கெட் கீப்பர் அல்லாத ஒரு வீரர் ஆறு கேட்சுகள் பிடித்திருப்பது கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் கிரிக்கெட் உலகிற்கு ஒரு புதிய மைல்கல்லை அவர் படைத்துள்ளார்.
அகமதாபாத்தில் நடைபெற்ற விஜய் ஹஸாரே டிராபி எலைட் குரூப் ஏ போட்டியில், கேரளா அணி திரிபுராவை 145 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில்தான் 24 வயதான சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர், கேரளா அணிக்காக தனது லிஸ்ட் ஏ அறிமுகத்தைப் பெற்று, வரலாற்றில் தனது பெயரைப் பொறித்தார்.
விக்னேஷ் புத்தூர் சாதனை:
முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரரான புத்தூர், டிசம்பர் 16 அன்று அபுதாபியில் நடந்த ஐபிஎல் 2026 ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ₹30 லட்சத்திற்கு வாங்கப்பட்டார். அடுத்த ஐபிஎல் சீசனில் ராயல்ஸ் அணிக்காக விளையாடவுள்ள அவர், கேரளாவின் மல்லப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது சொந்த பந்துவீச்சில் பிடித்த ஒரு கேட்ச் உட்பட இந்த ஆறு சாதனைக் கேட்சுகளைப் பிடித்துள்ளார்.
பேட் செய்யும் வாய்ப்பு புத்தூர் பெறவில்லை என்றாலும், தனது அபாரமான ஃபில்டிங் மூலம் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். திரிபுரா அணியின் இன்னிங்ஸின் 11வது ஓவரின் மூன்றாவது பந்தில், தனது பந்துவீச்சில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் உடியன் போஸை 27 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து வெளியேற்றினார்.
ஆட்டத்தின் முதல் விக்கெட்டுகளில் ஒரு கேட்ச் மட்டுமே பிடித்த புத்தூர், பின்னர் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஏழு ஓவர்களுக்கும் குறைவான இடைவெளியில் அடுத்த ஐந்து கேட்சுகளை அடுத்தடுத்துப் பிடித்தார். பாபா அபராஜித்தின் பந்துகளில் ஸ்வப்னில் சிங், சவுரப் தாஸ், அபிஜித் சர்க்கார் மற்றும் விக்கி சஹா ஆகியோரின் கேட்சுகளைப் பிடித்த அவர், அங்கித் குமார் பந்துவீச்சில் ஸ்ரீதாம் பாலின் கேட்சையும் நிறைவு செய்தார்.
முந்தைய சாதனைகள்:
லிஸ்ட் ஏ போட்டியில் தென்னாப்பிரிக்காவின் ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் ஒரே போட்டியில் 5 கேட்ச்களை பிடித்ததே சாதனையாக இருந்தது.‘ரோட்ஸ், கடந்த 1993 நவம்பர் 14 அன்று மும்பையில் உள்ள பிரபோர்ன் ஸ்டேடியத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடியபோது ஐந்து கேட்சுகளைப் பிடித்து சாதனை செய்திருந்தார். தற்போது புத்தூர் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
இதையும் படிங்க: விராட் கேப்டன்சில இத நெனச்சாலே கவலையா இருக்கும்.. அதான் அவங்களால ஐசிசி டிராபி ஜெயிக்க முடியல – முன்னாள் வீரர்கள் ஆதங்கம்
இதேபோல், 2025 மே 29 அன்று பிர்மிங்காமில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் ஹாரி புரூக்கும் ஐந்து கேட்சுகள் பிடித்திருந்தார். மேலும், விஜய் ஹஸாரே டிராபியில், 2025 ஜனவரி 3 அன்று மும்பையில் சிக்கிமுக்கு எதிராக மேகாலயாவிற்காக ஆரியன் சங்மாவும் ஐந்து கேட்சுகளைப் பிடித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.






